மராட்டிய மாநில அரசுக்கு எதிராக டிசம்பர் 17-ம் தேதி மாபெரும் பேரணி - உத்தவ் தாக்கரே அறிவிப்பு

கோழைத்தனமான மராட்டிய அரசுக்கு எதிராக தங்களுடன் சேருமாறு அனைத்து கட்சிகளுக்கு மகா விகாஸ் அகாதி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2022-12-06 06:31 GMT

மும்பை,

மராட்டியத்தில் அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே - பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக டிசம்பர் 17-ம் தேதி மும்பையில் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தப்போவதாக முன்னாள் முதல்-மந்திரி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே(சிவசேனா) மற்றும் தேவேந்திர பட்னாவிஸ்(பாஜக) அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக டிசம்பர் 17 அன்று மும்பையில் அனைத்துக் கட்சி எதிர்ப்பு ஊர்வலத்தை எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாடி அறிவித்தது. மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த அணிவகுப்பு நடத்தப்படும்.

முன்னாள் முதல்வரும், சிவசேனா (யுபிடி) தலைவருமான உத்தவ் தாக்கரே என்சிபி தலைவர் அஜித் பவாரின் இல்லத்தில் நடைபெற்ற எம்விஏ தலைவர்களின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "இது அரசியலுக்கான அணிவகுப்பு அல்ல, மராட்டியத்தின் பெருமைக்கான போராட்டம். மராட்டியத்திற்கு எதிராக கர்நாடக முதல்வரின் கீழ்த்தரமான அறிக்கைகளைக் கூட எதிர்கொள்ள முடியாத கோழைத்தனமான மராட்டிய அரசுக்கு எதிராக எங்களுடன் சேருமாறு அனைத்து கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு மகா விகாஸ் அகாதி வேண்டுகோள் விடுத்துள்ளது.

எம்.வி.ஏ-வின் போராட்ட அணிவகுப்பு காலை 11 மணிக்கு பைகுல்லாவில் உள்ள ஜிஜாமாதா உத்யானில் இருந்து தொடங்கி சிஎஸ்எம்டியின் ஆசாத் மைதானம் வரை செல்லும். இது மிகப்பெரிய போராட்டமாக இருக்கும்" என்று தாக்கரே கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்