ஊர் நடுவே மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த போலீசார் - தேர்தலை புறக்கணித்த குஜராத் கிராம மக்கள்

மின்கம்பத்தில் போலீசார் கட்டி வைத்து அடிக்க சுற்றி இருந்தவர்கள் அதை கண்டு ஆரவாரமடைந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.

Update: 2022-12-06 04:31 GMT

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் நேற்று இறுதிகட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகின. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மொத்தம் 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்கை செலுத்தினர்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று நடந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர். அந்த கிராமத்தை சேர்ந்த 1 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

கிராம மக்கள் தேர்தலில் வாக்களிக்காததற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

குஜராத் மாநிலம் ஹிடா மாவட்டம் உன்ட்ஹிலா கிராமத்தில் கடந்த அக்டோபர் மாதம் இந்து மத வழிபாட்டு தலமான துல்ஜா பவானி அம்மன் கோவிலில் கர்பா நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த கோவில் அருகே இஸ்லாமிய மத பள்ளியான மதராசா உள்ளது. இதனால், அப்பகுதியில் கர்பா நிகழ்ச்சிக்கு அக்கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், கர்பா நிகழ்ச்சி நடைபெற்றபோது அந்த கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கும்பலாக வந்து நிகழ்ச்சிக்கு இடையூறு செய்துள்ளனர்.

கற்கல் உள்ளிட்டவற்றை வீசி கர்பா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 10 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் கல்வீச்சு சம்பவம் நடைபெற்ற பகுதியான கிராமத்தில் மையப்பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.

அங்கு ஒரு மின் கம்பத்தில் கட்டி வைத்து 10 பேரையும் போலீசார் கடுமையாக தாக்கினர். கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரையும், அழைத்து மின்கம்பத்தில் கட்டிவைத்து போலீசார் தாக்க அதை அங்கு சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்த்து ஆரவாரமடைந்த கொடூர சம்பவமும் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை கண்டித்து உன்ட்ஹிலா கிராமத்தில் உள்ள இஸ்லாமிய மதத்தை சேர்ந்த வாக்காளர்கள் 1 ஆயிரத்து 400 பேர் நேற்று நடந்த தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர்.

3 ஆயிரத்து 700 பேரை மொத்த வாக்காளர்களாக கொண்ட அந்த கிராமத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 1 ஆயிரத்து 400 வாக்களர்கள் வாக்களிக்கவில்லை. அதேவேளை, உன்ட்ஹிலா கிராமத்தில் மொத்தம் 43 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். மேலும், தேர்தலை புறக்கணிப்பதாக யாரும் கூறவில்லை என்றும் தேர்தல் அதிகாரி கூறினார்.

மேலும் படிக்க... மத நிகழ்ச்சியில் கல் வீசிய நபர்களை ஊர் நடுவே மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த போலீசார் - அதிர்ச்சி சம்பவம்

Tags:    

மேலும் செய்திகள்