வாழை தார் திருடியதாக கூறி தொழிலாளி அடித்து கொலை

வாழை தார் திருடியதாக கூறி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-10-18 21:17 GMT

துமகூரு:

துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா ஐதி கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தம் (வயது 30). இவர் மதுகிரியில் உள்ள வாழை மண்டியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அந்த வாழை மண்டியில் இருந்து 2 வாழை தார்கள் காணாமல் போனது. அந்த வாழை தார்களை புருஷோத்தம் திருடியதாக கூறி வாழை மண்டியின் உரிமையாளர் பாலாஜி ரெட்டி உள்பட 5 பேர் சேர்ந்து புருஷோத்தமை அடித்து, உதைத்தனர். பின்னர் அவரை மதுகிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து பாலாஜிக்கு, புருஷோத்தமின் குடும்பத்தினர் ரூ.5 ஆயிரம் கொடுத்தனர். இதனால் புருஷோத்தம் மீதான புகாரை பாலாஜி வாபஸ் வாங்கினார். இதையடுத்து புருஷோத்தம் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் புருஷோத்தமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவரை குடும்பத்தினர் துமகூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று புருஷோத்தம் உயிரிழந்தார். இந்த நிலையில் பாலாஜி உள்பட 5 பேர் சேர்ந்து நடத்திய கொடூர தாக்குதலால் தான் புருஷோத்தம் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் மதுகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலாஜியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர். புருஷோத்தம் தலித் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் தலித் என்பதால் அவரை அடித்து கொலை செய்ததாக தலித் அமைப்பினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்