கொலையான பா.ஜனதா பிரமுகர் மனைவிக்கு மீண்டும் அரசு பணி; முதல்-மந்திரி சித்தராமையா உறுதி

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், பிரவீன் நெட்டாரின் மனைவி நூதனகுமாரியின் அரசு பணி திடீரென ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-05-29 01:10 GMT

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார் (வயது 36). பா.ஜனதா பிரமுகரான இவர், கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் 26-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 10 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில், அப்போது இருந்த பா.ஜனதா அரசு பிரவீன் நெட்டாரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கும் என்று உறுதி அளித்தது. இதையடுத்து முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி பிரவீன் நெட்டாரின் மனைவி நூதனகுமாரிக்கு ஒப்பந்த அடிப்படையில் குரூப்-சி அந்தஸ்தில் பணி வழங்கினார்.

ஆனால் அவர் மங்களூருவில் பணியாற்ற விருப்பம் தெரிவித்ததால், நூதனகுமாரி மங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இயற்கை பேரிடர் பிரிவில் பணி நியமனம் செய்யப்பட்டார். அங்கு அவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், பிரவீன் நெட்டாரின் மனைவி நூதனகுமாரியின் அரசு பணி திடீரென ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இதை அறிந்த பா.ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சித்தராமையாவை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்தநிலையில் சித்தராமையா தனது டுவிட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் பிரவீன் நெட்டார் மனைவி நூதனகுமாரிக்கு மீண்டும் அரசு பணி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்