நிலப்பிரச்சினையில் கல்லால் தாக்கி விவசாயி கொலை
நிலப்பிரச்சினையில் விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பாகல்கோட்டை அருகே நடந்துள்ளது.;
பாகல்கோட்டை
பாகல்கோட்டை மாவட்டம் சிரூர் கிராமத்தை சேர்ந்தவர் ஈரப்பா. இவரது மகன் சங்கப்பா(வயது 32), விவசாயி. இவரது சகோதரியை ரமேஷ் அங்கடி என்பவர் திருமணம் செய்துள்ளார். மகளை திருமணம் செய்திருந்ததால் ஈரப்பா தனது மருமகன் ரமேஷ் அங்கடிக்கு விவசாயம் செய்ய சிறிய நிலத்தை வழங்கி இருந்தார். அந்த நிலத்திற்கு அருகே உள்ள தோட்டத்தில் சங்கப்பா விவசாயம் செய்துவந்தார். இந்த நிலையில், சங்கப்பாவிடம் உள்ள விவசாய தோட்டத்தில் பாதி நிலத்தை கொடுக்கும்படி ரமேஷ் அங்கடி கேட்டதாக தெரிகிறது. இந்த நிலப்பிரச்சினை காரணமாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று காலையில் தோட்டத்திற்கு சென்ற சங்கப்பாவை மர்மநபர்கள் கல்லால் தலையில் தாக்கி கொலை செய்தார்கள். தகவல்அறிந்ததும் பாகல்கோட்டை புறநகர் போலீசார் விரைந்து வந்து சங்கப்பாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது நிலப்பிரச்சினையில் சங்கப்பாவை, அவரது அக்காள் கணவரான ரமேஷ் அங்கடி மற்றும் சுனில் ஆகிய 2 பேரும் தான் கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பாகல்கோட்டை புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் அங்கடி, சுனிலை வலைவீசி தேடிவருகிறார்கள்.