பாதிக்கப்பட்ட பெண்ணை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்ய வேண்டும் ; பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு ஜாமின்
பாதிக்கப்பட்ட பெண்ணை 1 ஆண்டுக்குள் தேடி கண்டுபிடித்து திருமணம் செய்ய வேண்டும்
மும்பை,
பாதிக்கப்பட்ட பெண்ணை 1 ஆண்டில் தேடி கண்டுபிடித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்து பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 26 வயது நபருக்கு மும்பை ஐகோர்ட்டு ஜாமின் வழங்கியுள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த 26 வயது நபரும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் 2018-ம் ஆண்டு காதலித்து வந்துள்ளனர். அப்போது, கடந்த 2019-ம் ஆண்டு அந்த இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளார்.
கர்ப்பமடைந்ததை தனது காதலனிடம் கூறி திருமணம் செய்துகொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால், காதலியை திருமணம் செய்துகொள்ளாமல் அந்த நபர் தவிர்த்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அந்த பெண்ணுக்கு கடந்த 2020 ஜனவரி 27-ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. ஆனால், ஜனவரி 30-ம் தேதி தன் குழந்தையை மருத்துவமனை அருகே வைத்துவிட்டு அந்த பெண் தலைமறைவாகியுள்ளார்.
பின்னர், பிப்ரவரி மாதம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றி விட்டதாக காதலன் மீது அந்த பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை தொடர்ந்து பெண்ணின் காதலனை போலீசார் பிப்ரவரி மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காதலன் மீது புகார் அளித்த பெண் தனது குழந்தையை மருத்துவமனை அருகே விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார். அந்த குழந்தை காப்பகத்தில் வளர்க்கப்பட நிலையில் தற்போது அந்த குழந்தை தத்துகொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், காதலி அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள அந்த இளைஞர், தனது காதலியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி நிபந்தனைகளுடன் பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு ஜாமின் வழங்கினார். ஜாமின் வழங்கியது தொடர்பாக நீதிபதி விதித்த நிபந்தனை மற்றும் கருத்துகள் பின்வருமாறு;
குற்றவாளியுடன் பாதிக்கப்பட்ட இளம்பெண் 2018 முதல் உறவில் இருந்துள்ளார். இது அந்த பெண்ணின் குடும்பத்திற்கும் தெரியும் அவர்களும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என இளம்பெண்ணின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியுடன் 22 வயது இளம்பெண்ணும் விருப்பப்பட்டே உடல் ரீதியில் உறவில் இருந்துள்ளனர். ஆனால், காதலி கர்ப்பமடைந்ததை அறிந்த பின் குற்றவாளி அவரை விட்டு விலக முயற்சித்துள்ளார். இதனால், அந்த பெண் குற்றவாளி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளார் என நீதிபதி தெரிவித்தார்.
குழந்தை பெற்றெடுத்த பின் குழந்தையை கைவிட்டு அந்த பெண் மாயமாகியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.
குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகவும், தன் குழந்தையை கவனித்துகொள்வதாகவும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தான் தனது காதலனுடன் உறவில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இத்தகைய சூழ்நிலையில் மாயமான அந்த பெண்ணை குற்றவாளி 1 ஆண்டுக்குள் தேடி கண்டுபிடித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருந்த அந்த நபருக்கு ரூ. 25 ஆயிரம் பிணையில் நீதிபதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
ஜாமினில் வெளியே வந்துள்ள அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்த தனது காதலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.