முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
எர்ணாகுளத்தைச் சேர்ந்த அஜய் ஜோஸ் உள்ளிட்ட 6 பேர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'பெரியாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்டவும், வைகை அணையின் கொள்ளளவை அதிகரிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தற்போது உள்ள முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்த மத்திய அரசு தமிழக மற்றும் கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி, மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் மேத்யுஸ் நெடும்பாறா, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி, வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
இதற்கு தலைமை நீதிபதி, 'இந்த வாரம் புதிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். எனவே உங்களது மனுவை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும்' என தெரிவித்தார்.