முலாயம் சிங் யாதவின் உடல் அரசு மரியாதையுடன் இன்று தகனம்
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் நேற்று காலையில் மரணமடைந்தார்.;
குருகிராம்,
உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். மாநிலத்தில் 3 முறை முதல்-மந்திரியாகவும் இருந்த அவர், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்ட அவர் கடந்த 2-ந்தேதி அரியானாவின் குருகிராமில் உள்ள மெதந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கவலைக்கிடமான முறையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலை நேற்று முன்தினம் மிகவும் மோசமடைந்தது. எனவே உயிர் காக்கும் கருவிகள் துணை கொண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முலாயமின் உயிரை காக்க டாக்டர்கள் கடுமையாக போராடினர்.
ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று காலை 8.16 மணியளவில் முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82.
முலாயம் சிங் யாதவின் மரண செய்தியை அவரது மகனும், மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டார். அதில் அவர், 'எனது தந்தையும், அனைவரின் நேதாஜியுமான (தலைவர்) முலாயம் சிங் யாதவ் காலமாகி விட்டார்' என குறிப்பிட்டு இருந்தார்.
அமித்ஷா நேரில் அஞ்சலி
இதைத்தொடர்ந்து ஏராளமான அரசியல் கட்சித்தலைவர்கள், சமாஜ்வாடி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதில் முக்கியமாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மெதந்தா ஆஸ்பத்திரிக்கு சென்று முலாயம் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதைப்போல காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா, ஐக்கிய ஜனதாதள தலைவர் கே.சி.தியாகி உள்ளிட்ட தலைவர்களும் ஆஸ்பத்திரிக்கு நேரிலேயே சென்று முலாயம் சிங் யாதவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
3 நாள் துக்கம் அனுசரிப்பு
பின்னர் முலாயம் சிங் யாதவின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரபிரதேசத்தின் இடாவா மாவட்டத்துக்கு உட்பட்ட சைபாய் கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவரது உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் சொந்த ஊரிலேயே தகனம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினரும், கட்சியினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியான முலாயம் சிங் யாதவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.
மேலும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 3 நாள் அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
விவசாய குடும்பத்தில் பிறந்தவர்
இடாவா மாவட்டத்தின் சைபாயில் 1939-ம் ஆண்டு நவம்பர் 22-ந்தேதி விவசாய குடும்பத்தில் பிறந்தவர், முலாயம் சிங் யாதவ். அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பு பயின்ற அவர், பள்ளி நாட்களிலேயே அரசியல் சார்ந்து இயங்கினார்.
குறிப்பாக ராம் மனோகர் லோகியாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தனது பதின்ம பருவத்திலேயே அரசியலில் காலடி வைத்தார்.
லோகியாவைப்போலவே சோசலிச தலைவராக அறியப்பட்ட முலாயம் சிங் யாதவ், அவரது சன்யுக்த் சோசலிச கட்சி, சரண் சிங்கின் பாரதிய கிராந்தி தளம், பாரதிய லோக்தளம், சமாஜ்வாடி ஜனதாதளம் என பல்வேறு கட்சிகளில் சேர்ந்து தனது பொது வாழ்க்கையை நடத்தினார்.
முதல்-மந்திரி ஆனார்
இறுதியில் கடந்த 1992-ம் ஆண்டு சமாஜ்வாடியை நிறுவி மாநிலத்தின் முன்னணி தலைவராக மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் கோலோச்சினார். அயோத்தியில் ராமர் கோவிலுக்கான போராட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது புதிய கட்சியை தோற்றுவித்த அவர், சமயசார்பற்ற அரசியலை வலுவாக கடைப்பிடித்தார்.
முன்னதாக 1967-ம் ஆண்டு முதன் முதலாக மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதல், 10 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
நாட்டில் அவசர நிலையை இந்திரா காந்தி பிறப்பித்தபோது, பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களைப்போல முலாயமும் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் விடுதலையடைந்த அவர், லோக்தளம் கட்சியின் மாநில தலைவரானார்.
1989-ம் ஆண்டு முலாயம் சிங் தலைமையிலான ஜனதாதளம் கட்சி மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது பா.ஜனதா ஆதரவுடன் இவர் முதல்-மந்திரியானார்.
ஆனால் ராமர் கோவில் பிரச்சினை காரணமாக அரசுக்கு அளித்த ஆதரவை பா.ஜனதா வாபஸ் பெற்றது. ஆனால் காங்கிரசின் தயவுடன் 1991 வரை சில மாதங்கள் தனது அரசை நீடித்தார்.
தொண்டர்களின் 'நேதாஜி'
பின்னர் 1993-95, 2003-07 கால கட்டங்களிலும் மாநில முதல்-மந்திரி பதவியை அலங்கரித்தார். 2012-ல் அவரது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, தனது மகன் அகிலேஷ் யாதவை ஆட்சியில் அமர்த்தினார். பின்னர் 2017-ல் கட்சியின் தலைவர் பதவியையும் மகனுக்கு தாரை வார்த்தார்.
முன்னதாக 1996-98-ம் ஆண்டுகளில் மத்திய ராணுவ மந்திரியாக இருந்தார். இவரது பதவிக்காலத்தில்தான் ரஷியாவுடனான சுகோய் போர் விமான ஒப்பந்தம் இறுதி செய்யப்படடது.
பல பத்தாண்டுகளாக உத்தரபிரதேசத்தின் அசைக்க முடியாத தலைவராக இருந்த அவர், சமாஜ்வாடி தொண்டர்களின் அளவிட முடியாத அன்பை பெற்றிருந்தார். கட்சியின் வெற்றியிலும், தோல்வியிலும் அவரை கைவிடாத தொண்டர்கள், எப்போதும் நேதாஜியாகவே (தலைவர்) அவரை அன்போடு அழைத்து வந்தனர்.
அவரது மரணம் சமாஜ்வாடி கட்சியினரை மட்டுமின்றி மாநில மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
சோனியாவின் பிரதமர் கனவை தகர்த்தவர்
உத்தரபிரதேசத்திலும், தேசிய அரசியலிலும் நீண்ட காலம் கோலோச்சிய முலாயம் சிங் யாதவ், ேசானியாவின் பிரதமர் கனவை தகர்த்ததாக காங்கிரசார் மத்தியில் பேச்சு உண்டு.
அதாவது கடந்த 1999-ம் ஆண்டு நம்பிக்கை தீர்மானத்தில் அப்போதைய வாஜ்பாய் அரசு தோல்வியடைந்ததும், புதிதாக காங்கிரஸ் தலைவராகியிருந்த சோனியா அப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'எங்களுக்கு 272 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இன்னும் பல உறுப்பினர்கள் எங்களை ஆதரிப்பார்கள்' என நம்பிக்கை தெரிவித்தார்.
அப்போது 20 உறுப்பினர்களை வைத்திருந்த முலாயம் சிங்கின் சமாஜ்வாடியை மனதில் வைத்தே இதை அவர் கூறினார்.
ஆனால் சோனியா பிரதமராவதை விரும்பாத முலாயம் சிங் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஜோதிபாசுவை பிரதமராக்க பரிந்துரைத்தார். புதிய பிரதமர் யார் என்பதை அனைவரும் சேர்ந்தே முடிவு செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
இதன் மூலம் சோனியாவின் பிரதமர் கனவு தகர்ந்தது. அவர் பிரதமராக விரும்பினாரா? என்று அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் அவரை பிரதமராக்க வேண்டும் என்று விரும்பியது குறிப்பிடத்தக்கது.
பின்னாளில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியை காங்கிரஸ் ஆதரித்த போதிலும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முலாயம் சிங் யாதவ் அங்கம் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.