'குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்டத்தை அவசரமாக கொண்டு வர முடியாது' - மத்திய விவசாயத்துறை மந்திரி
அரசுடன் முறையான பேச்சுவார்த்தையை நடத்த விவசாயிகள் முன்வர வேண்டும் எனவும் மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அனைத்து பங்குதாரர்களையும் கலந்தாலோசிக்காமல் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி.) உறுதி செய்யும் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வர முடியாது என்றும், விவசாயிகள் அரசுடன் முறையான பேச்சுவார்த்தையை நடத்த முன்வர வேண்டும் எனவும் மத்திய விவசாயத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் ஆதாயங்களுக்காக விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தக்கூடியவர்கள் குறித்து விவசாயிகள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக விவசாயிகளுடன் 2 கட்டங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஒரு சில கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதாகவும், சில விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் குறிப்பிட்ட அர்ஜுன் முண்டா, தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.