குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை- அரசாணை வெளியீடு

'கிரகலட்சுமி' திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் விஷயத்தில் வருமான வரி செலுத்துவோருக்கு இந்த திட்டம் பொருந்தாது என்று கூறி கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Update: 2023-06-08 08:15 GMT

பெங்களூரு:-

குடும்ப தலைவிகள்

கர்நாடக அரசு 5 இலவச திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது கிரக லட்சுமி, இலவச மின்சாரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை, அன்ன பாக்கிய திட்டத்தில் தலா 10 கிலோ அரிசி வழங்கும் திட்டங்களை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கிரகலட்சமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த திட்டத்திற்கான அரசாணையை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஒருவருக்கு மட்டுமே...

* அரசால் வழங்கப்பட்டுள்ள ரேஷன் (பி.பி.எல்., ஏ.பி.எல்., அந்தியோதயா) அட்டையில் எஜமானி (குடும்ப தலைவி) என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு இந்த திட்டத்தின் பயன் கிடைக்கும்.

* ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தால், அதில் ஒருவருக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.

* இந்த திட்டத்திற்கு

வருகிற 15-ந் தேதி முதல் ஒரு மாதக் காலம் விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்படுகிறது.

* தகுதியானவர்கள் சேவா சிந்து இணையதள பக்கம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

* பயனாளர்கள் தவறான தகவலை அளித்து திட்டத்தின் பயன் பெற்றது தெரியவந்தால், அவர்களிடம் அந்த உதவித்தொகை முழுவதும் திரும்ப பெறப்படும்.

திட்டம் பொருந்தாது

* பயனாளா்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

* குடும்பத்தின் எஜமானர் (குடும்ப தலைவர்) அல்லது எஜமானி (குடும்ப தலைவி) வருமான வரி செலுத்துபவராகவோ அல்லது ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்பவராகவோ இருந்தால், அத்தகையோருக்கு இந்த திட்டம் பொருந்தாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்