கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவலை தடுப்பது குறித்து பசவராஜ் பொம்மை இன்று முக்கிய ஆலோசனை

கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவலை தடுப்பது குறித்து சுகாதாரத் துறையினருடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதற்கிடைய குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பான புதிய வழிகாட்டுதலை அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2022-08-01 21:08 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவலை தடுப்பது குறித்து சுகாதாரத்துறையினருடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதற்கிடைய குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பான புதிய வழிகாட்டுதலை அரசு வெளியிட்டுள்ளது.

புதிய வரவு குரங்கு அம்மை

சீனாவில் இருந்து கடந்த 2020-ம் ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது அனைத்து நாடுகளிலும் தனது தாக்கத்தை தொடுத்து உள்ளது. கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை, 3-வது அலை என்று மூன்று அலைகள் முடிந்து விட்டன. சமீபகாலமாக திடீரென அதிகரிக்கும் பாதிப்புகளால் கொரோனா 4-வது அலை வர சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே புதிய வைரசுகளும் அடிக்கடி பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய வரவாக குரங்கு அம்மை என்ற வைரஸ் பரவி வருகிறது.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட இந்த குரங்கு அம்மை இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பை கண்ட கேரளாவில் தான் குரங்கு அம்மையும் முதன்முதலாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி, ஐதராபாத் ஆகிய மாநிலங்களிலும் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில் கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு இருந்த 22 வயது வாலிபர் திடீரென உயிரிழந்தார். அவர் குரங்கு அம்மையால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பசவராஜ் பொம்மை

கேரளாவில் குரங்கு அம்மையால் வாலிபர் உயிரிழந்ததால் கேரளாவின் அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் குரங்கு அம்மை பரவி விடும் என்று மக்கள் மத்தியில் பீதி எழுந்து உள்ளது. இதற்கிடையே பெங்களூருவுக்கு வந்த ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டது. இதனால் கர்நாடகத்திலும் குரங்கு அம்மை பரவி விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் அந்த ஆப்பிரிக்க நபர் குரங்கு அம்மையால் பாதிக்கப்படவில்லை என்றும், சின்னம்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார். இந்த நிலையில் தாவணகெரேயில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முக்கிய ஆலோசனை

கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். நாங்கள் குரங்கு அம்மையை தீவிரமாக எடுத்து உள்ளோம். கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுப்பது குறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், சுகாதாரத்துறையினருடன் நாளை (அதாவது இன்று) முக்கிய ஆலோசனை நடத்த உள்ளேன்.

இந்த ஆலோசனையின் போது வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை சோதனை செய்வது, ஆய்வகங்கள் அமைப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. குரங்கு அம்மையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், வழிகாட்டுதல்கள், மருந்துகளுக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பு பணிகள்

இந்த நிலையில் தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் குரங்கு அம்மை பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. உலக சுகாதார நிறுவனம், குரங்கு அம்மை நோயை பொது சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. சுகாதாரத்துறை ஏற்கனவே ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் 1.30 கோடி பேர் வசிக்கிறார்கள். அதனால் இங்கு கண்காணிப்புகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. தலைமை சுகாதார அதிகாரி, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி, அனைத்து மண்டல சுகாதார அதிகாரிகள் குரங்கு நோய் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

21 நாட்கள் தனிமை

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பஸ் நிலையங்களில் சிறப்பு குழுக்களை நியமித்து பயணிகளுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் உள்ள டாக்டர்கள், குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ள நோயாளிகள் குறித்து விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

நோயாளியுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிய, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, பரிசோதனை செய்வது குறித்து மருத்துவ ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்ய வேண்டும். நோய் உறுதி செய்யப்படும் நோயாளிகள் 21 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அனைத்து நோய் பாதிப்பும் நீங்கிய பிறகே நோயாளிகள் பொதுவெளியில் நடமாட அனுமதிக்க வேண்டும்.

விழிப்புணர்வு

பொதுமக்களிடையே குரங்கு அம்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரியை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். சுகாதாரத்துறை பிறப்பித்துள்ள அனைத்து வழிகாட்டுதலையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்