மொபைல் செயலி மூலம் பண மோசடி; ரூ.51 கோடி நிதி முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
மொபைல் செயலி மூலம் பண மோசடி காரணாமாக ரூ.51 கோடி நிதி முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'எம்பிஎப்' என்ற மொபைல் செயலிக்கு பின்னணியில் செயல்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது மேகாலயா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த செயலியில் முதலீடு செய்தால், அதிக வருவாய் கிடைக்கும் என்று ஆசைகாட்டி, மோசடி கும்பல் ஏராளமானோரை ஈர்த்தது. பின்னர், செயலியை செயலிழக்கச் செய்து விட்டு, கோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் தப்பி விட்டது.
இதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கு பதிவு செய்தது. அதன் அடிப்படையில், நொய்டா, புனே, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது.
இதைத்தொடர்ந்து, 'எம்பிஎப்' செயலியுடன் தொடர்புடையவர்களின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.51 கோடியே 11 லட்சத்தை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.