பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு - பிரதமர் மோடி பெருமிதம்

ஒரே நாளில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான திட்ட பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2023-03-12 23:51 GMT

பெங்களூரு,

பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை ரூ.8,480 கோடியில் நிறுவப்பட்டுள்ளது. 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த சாலையால் பெங்களூரு-மைசூரு இடையே பயண நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 75 நிமிடங்களாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 10 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகாவில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அந்த சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அதே போல், பிரதமர் மோடி ரூ.4,130 கோடியில் மைசூரு-குஷால் நகர்(குடகு மாவட்டம்) இடையே 4 வழிச்சாலை திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இரட்டை என்ஜின் அரசு

இந்த இரட்டை என்ஜின் அரசு ஒவ்வொரு குடிமகனின் கோரிக்கைகளையும் விரைவான வளர்ச்சியுடன் நிறைவேற்ற பாடுபடுகிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் கர்நாடக மக்களுக்கு இரட்டை என்ஜின் அரசின் பரிசு ஆகும். பெங்களூரு-மைசூரு இடையேயான இந்த விரைவுச்சாலையால் நாட்டின் இளைஞர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். இந்த விரைவுச்சாலை மைசூரு-பெங்களூரு இடையிலான பயண நேரத்தை பாதியாக குறைக்கும்.

பாரத்மாலா மற்றும் சாகர்மாலா திட்டங்கள் இன்று இந்தியா மற்றும் கர்நாடகத்தின் நிலப்பரப்பை மாற்றுகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது, நமது நாட்டின் உள்கட்டமைப்பு பட்ஜெட் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை

முந்தைய ஆட்சி காலத்தில் ஏழைகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் பெரும்பகுதி கொள்ளையடிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு ஏழை-எளிய மக்களின் வலியை புரிந்துகொண்ட உணர்வுள்ள அரசு ஆட்சிக்கு வந்தது. அரசு தொடர்ந்து உழைத்து ஏழைகளுக்கு சேவை செய்ய வீடு, குடிநீர் இணைப்பு, 'உஜ்வாலா' சமையல் எரிவாயு இணைப்பு, மின்சாரம், சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் முன்னுரிமையை உறுதி செய்தது.

கடந்த 9 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 3 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பயிர்களின் நிச்சயமற்ற தன்மையால் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளின் நிலுவைத்தொகை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலக்கப்பட்டால் இந்த பிரச்சினைக்கு பெரிய அளவில் தீர்வு கிடைக்கும். இந்த பணியை நாங்கள் செய்கிறோம். கடந்த ஆண்டு சர்க்கரை ஆலைகள், ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான எத்தனாலை எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்று கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்கின.

வாய்ப்புகளின் பூமி

இந்தியா வாய்ப்புகளின் பூமி என்று கூறி உலகம் முழுவதும் உள்ள மக்கள் நமது தேசத்தின் மீது தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கடந்த 2022-ம் ஆண்டில் இந்தியா சாதனை படைக்கும் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றது.

நான், ஏழைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த செயல்பட்டு வருகிறேன். ஆனால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?. எனக்கு கல்லறை தோண்ட கனவு காண்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் இந்திய மக்களின் ஆசீர்வாதங்கள் எனது பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. இது காங்கிரசுக்கு தெரியவில்லை என்று மோடி பேசினார்.

மலர்களை தூவினர்

விழாவில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி, நடிகை சுமலதா அம்பரீஷ் எம்.பி. மற்றும் கர்நாடக மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

மண்டியாவில் 1.8 கிலோ மீட்டர் தூரம் பிரதமர் மோடி திறந்த காரில் ஊர்வலம் நடத்தினர். இதில் திறந்த காரில் பக்கவாட்டில் நின்றபடி சாலையின் இருபுறமும் குவிந்திருந்த பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் மக்களைப் பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்தார். கட்சியினர் அவர் மீது மலர்களை தூவி மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஆரவாரம் செய்தனர். அதுபோல் காரில் விழுந்திருந்த பூக்களை எடுத்து பிரதமர் மோடி மக்கள் மீது வீசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த விழாவை முடித்து கொண்டு பிரதமர் மோடி மீண்டும் விமானம் மூலம் தார்வாருக்கு சென்றார். அங்கு ஐ.ஐ.டி. வளாகத்தை திறந்து வைத்தார்.

சீர்மிகு நகரம்

மேலும் சித்தரோடு சுவாமி உப்பள்ளி ரெயில் நிலையத்தில் 1,507 மீட்டர் தூர நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள உலகின் மிக நீளமான இந்த நடைமேடை ரூ.20 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஒசப்பேட்டே-உப்பள்ளி-டினைகாட் இடையேயான ரெயில் பாதை ரூ.530 கோடியில் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த பாதையையும் அவர் திறந்து வைத்தார்.

நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்