சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தகர்க்க வங்கியை 'கேடயமாக' மத்திய அரசு பயன்படுத்துகிறது - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
மோசடியான தேர்தல் பத்திர திட்டத்தால் பா.ஜனதா பெரிதும் பலன் அடைந்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு ரத்து செய்து விட்டது.
இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை மார்ச் 6-ந் தேதிக்குள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கியை கேட்டுக்கொண்டது. இதற்கிடையே, இந்த விவரங்களை எடுக்க நேரம் ஆகும் என்பதால், கால அவகாசத்தை ஜூன் 30-ந் தேதி வரை நீட்டிக்கக்கோரி, ஸ்டேட் வங்கி நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
இந்நிலையில், வங்கி அணுகுமுறையை வைத்து மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "தேர்தல் பத்திரம் மூலம் கருப்பு பணத்தை குவிக்கும் மோடி அரசின் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து விட்டது. மார்ச் 6-ந் தேதிக்குள், நன்கொடையாளர்கள் விவரங்களை அளிக்குமாறு கூறியுள்ளது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு, அதாவது ஜூன் 30-ந் தேதிவாக்கில் சமர்ப்பிக்க பா.ஜனதா விரும்புகிறது. மக்களவை பதவிக்காலம் ஜூன் 16-ந் தேதியுடன் முடிவடைகிறது.
மோசடியான தேர்தல் பத்திர திட்டத்தால் பா.ஜனதாதான் பெரிதும் பலன் அடைந்துள்ளது. நெடுஞ்சாலை, துறைமுகம், விமான நிலையம், மின்நிலையங்கள் ஆகியவை தொடர்பான ஒப்பந்தங்கள், பிரதமர் மோடியின் பணக்கார நண்பர்களுக்கு அளிக்கப்பட்டு, அவற்றுக்கு பிரதிபலனாக தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறப்பட்டுள்ளது.
இந்த சந்தேகத்துக்குரிய பேரங்களை மறைப்பதற்காகத்தான் பாரத ஸ்டேட் வங்கியை மோடி அரசு கேடயமாக பயன்படுத்துகிறது. இதன்மூலம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் தகர்க்க வங்கியை பயன்படுத்துகிறது.
நன்கொடையாளர்கள் தகவல்களை ஒப்பிட்டு பார்க்க 24 மணி நேரம் போதும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது, ஸ்டேட் வங்கிக்கு எதற்காக 4 மாதங்கள் தேவைப்படுகிறது?
தேர்தல் பத்திர திட்டம், ஜனநாயக விரோதமான திட்டம் என்பதுதான் காங்கிரசின் நிலைப்பாடு" என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.