கிராமப்புற குடிநீர் திட்டங்களுக்கு உலக வங்கி உதவி; மந்திரி பிரியங்க் கார்கே பேச்சு

கிராமப்புற குடிநீர் திட்டங்களுக்கு உலக வங்கி உதவி செய்வதாக கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.;

Update:2023-06-29 02:57 IST

பெங்களூரு:

கிராமப்புற குடிநீர் திட்டங்களுக்கு உலக வங்கி உதவி செய்வதாக கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.

குடிநீர் இணைப்பு

கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கு தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தை கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே தொடங்கி வைத்து பேசியதாவது:-

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமங்களில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு இறுதி வரை 53 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்ட பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 30 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

குளங்கள் புனரமைப்பு

இன்னும் 47 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு உலக வங்கி உதவி செய்கிறது. உலக வங்கி குடிநீர் இணைப்பு வழங்கவும், ஏரி, குளங்களை புனரமைக்கவும் நிதி வழங்குகிறது. கிராமங்களுக்கு எந்த தடையும் இன்றி நீர் வினியோகம் செய்ய கிராம பஞ்சாயத்துகள் பலப்படுத்தப்படும்.

ஜல் ஜீவன் திட்ட பணிகளை மேற்கொள்ளும்போது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீா் வினியோக பணிகள் தரமான வகையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு பிரியங்க் கார்கே பேசினார்.

இந்த கருத்தரங்கில் அனைத்து மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்