கர்நாடகத்தில் பால் விலை ரூ.3 உயர்வு; வருகிற 1-ந்தேதி முதல் அமல்
கர்நாடகத்தில் வருகிற 1-ந்தேதி முதல் பால் விலை ரூ.3 உயர்த்த முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.;
பெங்களூரு:
கர்நாடகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. முந்தைய ஆட்சி காலத்தில் இருந்தே பால் விலையை உயர்த்துமாறு கர்நாடக அரசிடம் கர்நாடக பால் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால் சட்டசபை தேர்தல் காரணமாக பால் விலையை உயர்த்த அப்போதைய பா.ஜனதா அரசு அனுமதி அளிக்கவில்லை. பால் விலையை உயர்த்தினால் மக்களிடையே பா.ஜனதா மீது அதிருப்தி ஏற்படும் என்று அக்கட்சி கருதியது. இதையடுத்து பால் விலையை உயர்த்தும் முடிவை பா.ஜனதா அரசு நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவராக பீமா நாயக் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கர்நாடக பால் கூட்டமைப்பு, பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து கடந்த வாரம் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் பால் விலையை உயர்த்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டுறவுத்துறை மந்திரி கே.என்.ராஜண்ணா, கால்
நடைத்துறை மந்திரி வெங்கடேஷ், கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பீமா நாயக் மற்றும் கூட்டுறவு, கால்நடைத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பீமா நாயக், பால் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கனவே கர்நாடகத்தில் தற்போது சாதாரண பால் விலை லிட்டர் ரூ.39-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஸ்பெஷல் பால் ரூ.45. தயிர் விலை ரூ.47 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. விலை ஏற்றத்தால், சாதாரண பால் ஒரு லிட்டர் ரூ.42 ஆகவும், ஸ்பெஷல் பால் ரூ.48 ஆகவும் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த பால் விலை உயர்வு வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.