மகா விகாஸ் அகாடி ஆட்சி காலத்தில் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு - பா.ஜனதா

மகா விகாஸ் அகாடி ஆட்சி காலத்தில் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கின் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.

Update: 2022-10-21 22:26 GMT

50 சதவீத பங்குகள்

பா.ஜனதா கட்சியின் லாத்தூர் நகர துணை தலைவராக இருப்பவர் பிரதீப் மோரே. இவர், நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவியின் தேஷ் அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மகா விகாஸ் ஆட்சி காலத்தில் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவியால் ரூ.7½ கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டது. இருவருக்கும் தலா 50 சதவீதம் பங்குகள் உள்ளன.

இந்த நிறுவனம் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி அன்று உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி வேளாண் ஆலையை கட்டுவதற்காக நிலம் ஒதுக்குமாறு நிறுவனம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து ஏப்ரல் 15-ந் தேதி அன்று அந்த நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிறுவனத்தின் முதலீடு ரூ.7.5 கோடியாக இருந்தபோதிலும், அது 2 லட்சத்து 52 ஆயிரத்து 726 சதுர மீட்டர் நிலத்திற்கு ரூ.15 கோடியே 28 லட்சத்து 99 ஆயிரத்து 300 செலுத்தியுள்ளது. ஒரு சதுர மீட்டருக்கு ரூ.605 வசூலிக்கப்பட்டுள்ளது.

சலுகை விலை

மராட்டிய தொழில் வளர்ச்சி கழகம்(எம்.ஐ.டி.சி.) நிலத்தை சலுகை விலையில் வழங்கியுள்ளது. இதே நிலத்திற்காக எம்.ஐ.டி.சி. முன்பு கடந்த 2 ஆண்டுகளாக 16 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. ஆனால் தேஷ் அக்ரோ பிரைவேட் லிமிடெட் உருவாக்கப்பட்டு 22 நாட்களில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதேபோல நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நிறுவனம் சார்பில் 2021-ம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி அன்று பந்தலூர் நகர கூட்டுறவு வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. 23 நாட்களில் அக்டோபர் 27-ந் தேதி ரூ.4 கோடி வழங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் லத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2-வது கடனுக்கு விண்ணப்பித்தது. அக்டோபரில் ரூ. 61 கோடி கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதே தொடர்ந்து 2022-ம் ஜூலை மாதம் மேலும் ரூ.55 கோடி கடன் ஒதுக்கப்பட்டது.

நாங்கள் எம்.ஐ.டி.சி. நில ஒதுக்கீடு மற்றும் கடன் பெறப்பட்ட விவகாரம் இரண்டிலும் விசாரணையை நாடியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு

நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார். அவரது மூத்த சகோதரர் அமித் தேஷ்முக் மகா விகாஸ் அகாடி ஆட்சி காலத்தில் மந்திரியாக இருந்தார்.

தேஷ் அக்ரோ பிரைவேட் லிமிடெட்டின் நிறுவன மேலாளர் தினேஷ் கேஸ்ரே, "பா.ஜனதாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கூறியுள்ளார். சட்டப்படி நிறுவனத்திற்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. கடனும் முறையாக பெற்றப்பட்டுள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்