பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் ஒன்றரை மணி நேரம் திடீர் நிறுத்தம் - பயணிகள் சிரமம்
முன் அறிவிப்பு இன்றி மெட்ரோ ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் மாணவர்களும், பணிக்கு செல்வோரும் சிரமத்திற்கு ஆளாகினர்.;
பெங்களூரு,
பெங்களூரு மெட்ரோவின் ஊதா வழித்தடமான பையப்பனஹல்லி-கருடாச்சார்பாலையா வழித்தடத்தில் தினந்தோறும் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். பெங்களூருவில் உள்ள மற்ற மெட்ரோ வழித்தடங்களை விட இதில் மக்கள் நெருக்கடி அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் பையப்பனஹல்லி-கருடாச்சார்பாலையா வழித்தடத்தில் இன்று காலை தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது. முன் அறிவிப்பு இன்றி ஒன்றரை மணிநேரம் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பணிக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.
பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு 9.20 மணிக்கு மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களுக்காக மெட்ரோ ரெயில் சேவை ஏற்கனவே சில முறை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.