திருமண விழாவில் கன்னட பாடல்களுடன் ஊர்வலம் நடத்தியவர்கள் மீது தாக்குதல்

திருமண விழாவில் கலந்து கொண்டவர்களை எம்.இ.எஸ். கட்சியினர் தாக்கினர். இதில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-27 21:32 GMT

பெங்களூரு

பெலகாவி மாவட்டம் நிப்பானி தாலுகா தாவனே கிராமத்தைச் சேர்ந்தவர் சித்து. இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ரேஷ்மாவுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான லட்சுமி ஹெப்பால்கரும் கலந்து கொண்டார். பின்னர் இரவில் மண்டபத்தில் இருந்து மணமகனும், மணமகளும் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். அப்போது கன்னட பாடல்கள் ஒலித்தபடி, நடனமாடி திருமண கோஷ்டியினர் ஊர்லவமாக சென்றார்கள்.

அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த எம்.இ.எஸ். கட்சியை சேர்ந்தவர்கள், கன்னட பாடல்கள் ஒலித்தபடி ஊர்வலமாக சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு நடனமாடிய வாலிபர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். காரில் இருந்த சித்து, ரேஷ்மாவையும் கீழே இறக்கி அந்த நபர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதில், ரேஷ்மா மற்றும் ஏராளமான வாலிபர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் ரேஷ்மா தவிர மற்ற வாலிபர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து நிப்பானி போலீஸ் நிலையம் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.இ.எஸ். கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து, நிப்பானி போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.இ.எஸ். கட்சியை சேர்ந்த அஜய், ஆகாஷ், சச்சின், சந்தோஷ் உள்பட 9 பேரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்