ராம்நாத் கோவிந்த் பாஜகவின் கொள்கைகளை நிறைவேற்ற இந்திய அரசியலமைப்பை விலையாக கொடுத்திருக்கிறார் - மெகபூபா முப்தி
பாஜகவின் அரசியல் நோக்கங்களுக்கு ராம்நாத் கோவிந்த் உதவியதாக மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டின் 14 வது ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பொறுப்பேற்று கொண்டார்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை விமர்சனம் செய்துள்ளார். ராம்நாத் கோவிந் நாட்டின் அரசியலமைப்பை பல முறை நசுக்கியதாகவும் பாஜகவின் அரசியல் நோக்கங்களுக்கு அவர் உதவியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ராம்நாத் கோவிந்த் குறித்து மெகபூபா முப்தி கூறுகையில், " பதவி விலகும் ஜனாதிபதி இந்திய அரசியலமைப்பை நசுக்கியவர் என்ற பெருமையை விட்டுச் செல்கிறார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் 370 நீக்கம், சிஏஏ, சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான குறிவைப்பு என அவர் பாஜகவின் அரசியல் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக இந்திய அரசியலமைப்பை விலையாக கொடுத்து இருக்கிறார்" என தெரிவித்து உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி குறித்த மெகபூபா முப்தியின் இந்த பேச்சால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.