தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் 87 சதவீதம் உயர்வு - மத்திய மந்திரி பெருமிதம்

கடந்த 8 ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். கல்வி இடங்களின் எண்ணிக்கை 87 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Update: 2022-12-15 23:47 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாட்டின் இளைய தலைமுறையினர் தரமான கல்வியை எளிதாக அணுகும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொண்டுள்ள இந்த திட்டங்களின் பலனாக நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

நாட்டின் மருத்துவக்கல்வித்துறையில் கடந்த 2014-ம் ஆண்டு வரை 387 மருத்துவக்கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இதனால் மருத்துவக்கல்வியை பெறுவதில் பெரும் சிரமம் இருந்தது.

ஆனால் மோடி அரசின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் காரணமாக முன்னுதாரண மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது 648 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு மருத்துவக்கல்லூரிகள் மட்டுமே 96 சதவீதம் அதிகரித்து இருக்கின்றன. தனியார் துறையிலும் 2014 முதல் 42 சதவீத உயர்வு ஏற்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில் 648 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் 355 கல்லூரிகள் அரசுக்கு சொந்தமானவையும், 293 கல்லூரிகள் தனியாருக்கு சொந்தமானவையும் ஆகும்.

முதுநிலை மருத்துவக்கல்வி

எம்.பி.பி.எஸ். கல்வி இடங்களின் எண்ணிக்கையும் மிக அதிக அளவாக 87 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதாவது 2014-ம் ஆண்டு இருந்த 51,348 இடங்களில் இருந்த 96,077 ஆக 2022-ல் அதிகரித்து இருக்கிறது.

இதைப்போல முதுநிலை மருத்துவப்படிப்பு இருக்கைகளிலும் 105 சதவீத உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. அதாவது 2014-ம் ஆண்டில் 31,185 ஆக இருந்த இருக்கைகள் தற்போது 63,842 ஆக உயர்ந்து உள்ளது.

ஒரு அரசு மருத்துவக்கல்லூரியில் 10,000 மருத்துவக்கல்வி இடங்கள் என்ற பார்வையின் அடிப்படையில் 16 மாநிலங்களில் 58 கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கின்றன.

இதைப்போல முதுநிலை மருத்துவக்கல்வி இடங்களிலும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 72 கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

பொது கவுன்சிலிங்

மேலும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 4 ஆயிரம் முதுநிலை மருத்துவ இடங்களுக்காக இரண்டாம் கட்டமாக 47 கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

நாடு, ஒரே தேர்வு, ஒரே தகுதி திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் எந்த பகுதியில் உள்ள கல்லூரிகளிலும் மாணவர்கள் படிக்க வசதியாக பொது கவுன்சிலிங் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

அதிகமான ஊழல் அமைப்பாக விளங்கி வந்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ கமிஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மாணவிகளின் இடைநிற்றல் சரிவு

பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரை, மாணவிகளின் பள்ளி இடைநிற்றல் விகிதம் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து சரிந்து வருகிறது.

மாணவிகளின் இடைநிற்றலுக்கு பள்ளிகளின் கழிவறை பிரச்சினையும் ஒரு காரணமாக இருந்தது. இதை களையும் நோக்கில் 2.5 லட்சம் பள்ளிகளில் 4.5 லட்சத்துக்கு அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டன.

இதன் காரணமாக இடைநிற்றல் விகிதம் 17-ல் இருந்து 13 சதவீதமாக சரிந்து இருக்கிறது.

இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்