சட்டவிரோத முறையில் ரெயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை! நூற்றுக்கணக்கான பயணச்சீட்டுகள் பறிமுதல்!
சட்டவிரோத மென்பொருள் வாயிலாக ரெயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதால், மக்களுக்கு பயணச்சீட்டுகள் கிடைப்பது பாதிக்கப்பட்டது.
மும்பை,
ரெயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட 1,688 பயணச்சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் பெரும்பாலும் ரெயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். ரெயில்களில் இருக்கை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய இருக்கையின் தேவை பெருமளவு அதிகரித்து வருகிறது.
இதையடுத்து பல்வேறு தரப்பினர், பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொண்டு தேவைபடுபவர்களுக்கு அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
அவர்கள் இணைய தளம் மூலம் சட்டவிரோத மென்பொருள் வாயிலாக ரெயில் பயணச் சீட்டுகளை முன் பதிவு செய்வதால், சாதாரண மக்களுக்கு பயணச்சீட்டுக்கள் கிடைப்பது பாதிக்கப்பட்டது. இதை தடுப்பதற்காக ரெயில்வே பாதுகாப்புப்படை தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மேற்கு ரெயில்வே பாதுகாப்புப்படை மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில், ரூ.43 லட்சம் மதிப்பிலான 1,688 முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.