முககவசம் அணிவது அவசியமா? இல்லையா?

கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் முககவசம் அணிவது அவசியமா என்பது குறித்து டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து கூறியுள்ளனர்.

Update: 2022-10-21 22:13 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் முககவசம் அணிவது அவசியமா என்பது குறித்து டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து கூறியுள்ளனர்.

கொரோனா பரவல்

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே, அனைவர் மத்தியிலும் பெரும் அச்சமும், உயிர் பயமும் நிலவியது. கண்ணுக்கு புலப்படாத உருவில் இருந்த கொடியே வைரஸ் பலரை காவு வாங்கியது. இதனால் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், உற்றாரை இழந்து பல குடும்பங்களின் வாழ்வாதாரமே தடம்புரண்டு போய்விட்டது. சீனாவில் உதயமான கொரோனா என்னும் கொடிய அரக்கன் அனைத்து நாடுகளையும் தனது கோரப்பிடியில் ஆட்கொண்டிருந்தது. இந்தியாவில் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்தது. இந்தியாவில் கர்நாடகத்தில் தான் முதல் கொரோனா உயிர்பலி பதிவானது.

பின்னர் கர்நாடகத்தில் கொரோனா உயிர்பலி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே போனது. தினமும் 100 முதல் 120 பேர் வரை உயிரிழந்து வந்தனர். கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்காமல் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறின. கொரோனாவுக்கு பலியானவர்கள் உடல்களை அடக்கம் செய்ய மயானங்கள் முன்பு ஆம்புலன்சுகள் காத்து நின்ற அவலமும் நடந்தது.

முககவசம்

உயிர் பயத்தை காட்டிய கொரோனாவில் இருந்து தப்பிக்க முககவசம் என்ற ஆயுதத்தை மக்கள் கையில் எடுத்தனர். சானிடைசர் திரவங்கள் மக்களிடம் எப்போதும் இருந்தது. முககவசங்கள் உயிர் கவசங்கள் ஆயின. இதனால் முககவசங்களின் விற்பனையும் அதிகரித்தது. எங்கு பார்த்தாலும் அனைவரும் முககவசம் அணிந்து தான் ெவளியே வந்தனர். மேலும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அரசு கடும் கட்டுப்பாடு விதித்தது. முககவசம் அணியாமல் வருபவர்களை கண்காணிக்க மார்ஷல்களும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து உள்ளது. கர்நாடகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 100 முதல் 120 ஆக தான் உள்ளது. உயிரிழப்பும் 1 அல்லது 2 ஆக உள்ளது. இதனால் கொரோனா மீது இருந்த பயம் மக்களுக்கு தற்போது முற்றிலுமாக போய் விட்டது.

அதிக கூட்டம் கூடும் இடங்களில் கூட பொதுமக்கள் முககவசம் அணிவது இல்லை. பெங்களூருவை பொறுத்தவரை ஐ.டி. நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களில் முககவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது இன்னும் நடைமுறையில் உள்ளது. ஆனால் பொதுஇடங்களில் மக்கள் முககவசம் அணியாமல் வலம் வருகிறார்கள். மேலும் சானிடைசர் திரவத்தையும் பயன்படுத்துவது இல்லை. தற்போது கொரோனாவா அப்படின்னா என்ன என்று மக்கள் கேட்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில் முககவசத்தின் தேவை குறித்து டாக்டர், மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

மூச்சுவிடுவதில் சிரமம்

பெங்களூரு காமாட்சிபாளையாவில் வசிக்கும் ஹேமலதா என்ற இல்லத்தரசி கூறும்போது, "கொரோனாவில் இருந்து தப்பிக்க முககவசம் அணிவது அவசியம் தான். ஆனால் நீண்ட நேரம் முககவசம் அணிந்து இருப்பதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. தற்போது தொற்று குறைந்து உள்ளது. இதனால் முககவசம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை மீண்டும் தொற்று அதிகரித்தால் முக கவசத்தை பயன்படுத்தி கொள்ளலாம்" என்றார்.

ராஜாஜிநகரில் செல்போன் விற்பனை கடை நடத்தி வரும் ஹனுமந்தராஜ் என்பவர் கூறுகையில், "முககவசம் அணிவதை நான் நிறுத்தி விட்டேன். முககவசம் அணிந்தால் சரியாக சுவாசிக்க முடியாது. இப்போது தான் நிம்மதியாக மூச்சுவிட முடிகிறது. ஆனால் சானிடைசர் திரவத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். கொரோனா பாதிப்பு தற்போது முழுமையாக குறைந்து விட்டது. இதனால் எதற்காக முககவசம் அணிய வேண்டும். கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்தால் முககவசத்தை கையில் எடுப்பது பற்றி பார்த்து கொள்ள வேண்டியது தான்" என்றார்.

பெங்களூருவில் உள்ள டாக்டர் ராஜ்குமார் ரோட்டில் கடை வைத்து இருக்கும் மஞ்சுநாத் என்பவர் கூறும்போது, "கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது முககவசம் விற்பனை ஜோராக இருந்தது. தினமும் 100 முககவசங்கள் விற்பனையானது. ரூ.10 முதல் ரூ.50 வரை முககவசம் விற்பனை ஆகி வந்தது. தற்போது 10 முககவசங்கள் கூட விற்பனை ஆகவில்லை. மக்களுக்கு கொரோனா மீது இருந்த பயம் போய் விட்டது. முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்தால் முககவசம் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்றார்.

கொரோனா பயம் இல்லை

ராஜாஜிநகரில் மருந்தகம் நடத்தி வரும் ராஜேஸ் பண்டாரி என்பவர் கூறுகையில், "மக்களுக்கு கொரோனா பற்றி பயம் போய் விட்டது. முககவசம் அணிய யாரும் விரும்புவது இல்லை. எனது மருந்தகம் அமைந்து உள்ள இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. மெட்ரோ ரெயிலில் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்பதால் எனது மருந்தகத்தில் முககவசம் மட்டும் வாங்கி செல்கிறார்கள். சானிடைசரை யாரும் வாங்குவது இல்லை. தினமும் 10 முதல் 15 முககவசங்கள் விற்பனையாகிறது. சானிடைசர் விற்பனை ஆகவில்லை" என்றார்.

ராஜாஜிநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் டாக்டரான லாவண்யா என்பவர் கூறுகையில், "கொரோனா மீது மக்களுக்கு இருந்த பயம் போய் விட்டது. 'எச்-1 என்-1', 'இன்புளுயன்சா' வைரஸ் மிரட்டும் நிலையில் மக்களுக்கு துளி கூட பயம் இல்லை. பெரும்பாலான மக்கள் முககவசம் அணிவதை தவிர்த்து விட்டனர். பொதுஇடங்களுக்கு செல்லும் போது மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்பது எனது கருத்து. ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் முககவசம் அணிந்து வரவில்லை என்றால் நாங்களே அவர்களுக்கு முககவசம் வழங்கி வருகிறோம். முககவசம் அணிய வேண்டும் என்று மக்களை நாம் கட்டாயப்படுத்த முடியாது. முககவசம் அணிவது குறித்து அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது" என்றார்.

மூச்சு விடுவதில் சிரமம்

தனியார் ஆஸ்பத்திரி டாக்டரான தாமோதர் கிருஷ்ணா என்பவர் கூறுகையில், "கொரோனா முழுவதும் ஒழிந்து விடவில்லை. புதிதாக வைரஸ்கள் பரவி கொண்டே தான் இருக்கிறது. கொரோனாவை மக்கள் எளிதாக எடுத்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். இதனால் முககவசம் அணிவது இல்லை. யாரையும் முககவசம் அணியும்படி கட்டாயப்படுத்த முடியாது. கொரோனாவில் இருந்து தப்பிக்க மட்டும் இல்லாமல் பல்வேறு தொற்றுகளில் இருந்து தப்பிக்கவும் முககவசத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பது எனது கருத்து" என்றார். தொடக்கத்தில் உயிர்கொல்லி நோயாக கருத்தப்பட்ட கொரோனா இன்றைக்கு சாதாரண காய்ச்சல் போல் உடனடியாக குணப்படுத்த கூடிய நோயாக மாறிவிட்டதால், கொரோனா பற்றிய கவலை மக்களுக்கு இல்லாமல் போய்விட்டது. எனவே முககவசம் அணிய வேண்டியதில்லை என்பது மக்களின் கருத்தாக உள்ளது. கொரோனா வைரஸ் உருமாறும் தன்மை கொண்டது. இந்த தொற்று தீவிரம் அடைந்தால் அசுர வேகத்தில் பரவும், அதனால் மக்கள் முககவசம் அணிவது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்