மேற்கு வங்காளத்தில் தியாகிகள் தின பேரணி; மம்தா பானர்ஜி-அகிலேஷ் யாதவ் பங்கேற்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் திட்டம் பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக, மம்தா பானர்ஜியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேச அகிலேஷ் யாதவ் திட்டமிட்டு உள்ளார்.;
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் தியாகிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி ஒன்று நடைபெறுகிறது. இதில், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் இருந்து இன்று காலை அவர் புறப்பட்டார்.
1993-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தின் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதனை நினைவுகூரும் வகையில் இந்த தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதற்காக கொல்கத்தா நகரில் எஸ்பிளனேடு பகுதியில் தர்மதலா என்ற இடத்தில் நடைபெறும் பேரணியில் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்கும் வகையில் மிக பெரிய பேரணியாக இது இருக்கும். இந்த பேரணியை தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.
இதன்பின்னர், காளிகாட்டில் உள்ள மம்தா பானர்ஜியின் இல்லத்தில் வைத்து அவரை அகிலேஷ் சந்தித்து பேச உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை நடைபெற உள்ள சூழலில், எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன? என்பது பற்றி இந்த சந்திப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.