மராட்டியம்: முதன்முறையாக ஒமைக்ரானின் துணை வகை கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டியத்தில் ஒமைக்ரானின் பி.ஏ.4, பி.ஏ.5 வகை கொரோனா பாதிப்புகள் முதன்முறையாக கண்டறியப்பட்டு உள்ளன.

Update: 2022-05-28 16:55 GMT

புனே,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவ தொடங்கியபோது, மராட்டியம் அதிக பாதிப்புகளை சந்தித்தது. இதேபோன்று உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், புனே நகரில் பி.ஜே. மருத்துவ கல்லூரி ஒருங்கிணைப்புடன் நோயாளிகளுக்கு நடந்த முழு மரபணு வரிசை தொடர் பரிசோதனை முடிவில் புனே நகரில் 7 பேருக்கு ஒமைக்ரானின் துணை வகை கொரோனா பாதிப்புகள் முதன்முறையாக கண்டறியப்பட்டு உள்ளன.

அவர்களில் 4 பேருக்கு பி.ஏ.4, 3 பேருக்கு பி.ஏ.5 வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அனைத்து நோயாளிகளுக்கும் லேசான அறிகுறிகளே காணப்படுகின்றன. இதனால், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய தேவை இல்லை. வீட்டு தனிமையிலேயே வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மொத்தமுள்ள 7 பேரில் 4 பேர் ஆண்கள். 3 பேர் பெண்கள் ஆவர். 50 வயதுக்கு மேற்பட்ட 4 பேரும், 20 முதல் 40 வயதுக்கு உட்பட்ட 2 பேரும் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நோயாளிகளில் 2 பேர் கடந்த காலத்தில் தென்ஆப்பிரிக்கா மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். 3 பேர் கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு பயணித்துள்ளனர். 2 பேருக்கு கடந்த கால பயண வரலாறு எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்