மராத்தா இட ஒதுக்கீடு.. 17 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் மனோஜ் ஜரங்கே
ஓ.பி.சி. பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி ஜரங்கே மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.;
மும்பை:
மராட்டிய மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். குடியரசு தினத்தன்று மும்பையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கவிருந்த நிலையில், அவரது கோரிக்கையை ஏற்பதாக மாநில அரசு தெரிவித்தது. இதனால் ஜரங்கே உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.
அதன்பின்னர், மராட்டிய மாநில சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில், மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும், ஓ.பி.சி. பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி ஜரங்கே மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
இதையடுத்து சமீபத்தில் அரசு ஒரு வரைவு அறிவிப்பை வெளியிட்டது. அதில், மராத்தா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விவசாய குன்பி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆவணம் இருந்தால், அந்த நபரின் இரத்த சொந்தங்கள் அனைவருக்கும் குன்பி சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 17 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்வதாக ஜரங்கே இன்று அறிவித்தார். எனினும், குன்பி சாதிச் சான்றிதழ்களை ஏற்கனவே வைத்திருக்கும் நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த சான்றிதழ் வழங்கும் பணியை அரசு தொடங்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
குன்பி சமூகம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) பிரிவில் வருகிறது. ஆனால் இடஒதுக்கீட்டு சலுகைகளுக்கு தகுதி பெறும் வகையில் மராத்தா சமூகத்தினர் அனைவருக்கும் குன்பி சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஜரங்கே வலியுறுத்தி வருகிறார்.