பிரதமர் மோடி அகங்காரத்தை கைவிட்டால் பல பிரச்சினைகள் தீரும் - சஞ்சய் ராவத்
பிரதமர் மோடி தனது அகங்காரத்தை கைவிட்டால் பல பிரச்சினைகள் தீரும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை,
மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை அகற்றுவது, அனுமன் பஜனை விவகாரம் என மராட்டிய மாநிலத்தை ஆளும் சிவசேனாவுக்கு அடுத்தடுத்த பிரச்சினைகள் தலைதூக்கி வருகின்றன. நவநிர்மாண் சேனா, சுயேச்சை எம்.பி. நவ்நீத் ரானா மூலம் இந்த பிரச்சினை எழுந்தாலும், இதற்கு பின்புலத்தில் பா.ஜனதா இருப்பதாக சிவசேனா குற்றம் சாட்டி வருகிறது.
மேலும் பா.ஜனதா, சிவசேனா கட்சி தலைவர்களுக்கு இடையே கடும் வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புனேயில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சமஸ்கிருதிக் பவன் திறப்பு விழாவில் கலந்துகொண்ட சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. பேசியதாவது:-
கவுதம புத்தர் கூறிய ஒரேஒரு செய்தியை மட்டும் எப்போதும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அனைவரும் தங்கள் அகங்காரத்தை கைவிட வேண்டும். அதை கைவிட்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால் சிலர் மாறாக அகங்காரத்தை வளர்த்துக்கொள்கின்றனர். அகங்காரம் ஒழிந்துவிட்டால் சமுதாயத்தையும், மாநிலத்தையும், நாட்டையும் ஆட்டிப்படைக்கும் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இதை யாராவது நரேந்திர மோடியிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.