மணிஷ் சிசோடியா வங்கி லாக்கரை திறந்து சி.பி.ஐ. சோதனை: சிக்கியது என்ன?

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரை திறந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Update: 2022-08-31 00:20 GMT

காசியாபாத்,

டெல்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 19-ந் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முன்னேறி வருவதை தடுத்து நிறுத்தவே தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக மணிஷ் சிசோடியா கூறி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லி புறநகரான காசியாபாத்தில் செக்டார் 4 வசுந்தரா பகுதியில் அமைந்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் மணிஷ் சிசோடியாவின் லாக்கரில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் அங்கு நேற்று சோதனையை முன்னிட்டு, டி.வி. சானல்களின் கேமராமேன் குழுவினர் குவிந்து, அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. என்ன நடக்கிறது என்பதை காண விரும்பி பொதுமக்களும் அங்கே குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

அதைத்தொடர்ந்து மணிஷ் சிசோடியா மற்றும் அவரது மனைவி முன்னிலையில் அவர்களது வங்கி லாக்கரை சி.பி.ஐ. அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் திறந்து பார்த்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது.

இந்த சோதனையில் சிக்கியது என்ன என்பது பற்றி சி.பி.ஐ. தரப்பில் தகவல் இல்லை.

அந்த சோதனை முடிந்தவுடன் மணிஷ் சிசோடியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அழுத்தம் வந்து, அதன் அடிப்படையில் செயல்படுகின்றனர்.

இன்றைய சோதனைக்கு பின்னர் நான் குற்றமற்றவன் என்று சி.பி.ஐ. கூறிவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். அவர்கள் எனது வங்கி லாக்கரிலோ அல்லது வீட்டிலோ குற்றச்சாட்டு தொடர்பான எதையும் கண்டறியவில்லை என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்