மணிப்பூர்: அமைதி பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்கக்கோரி நாகா சமூகத்தினர் பேரணி

மணிப்பூரில் அமைதி பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்கக்கோரி மணிப்பூரில் நாகா சமூகத்தினர் நேற்று பல இடங்களில் பேரணி நடத்தினர்.

Update: 2023-08-09 21:22 GMT

இம்பால்,

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தினருக்கு இடையே நடந்து வரும் வன்முறைகள் இன்னும் ஓயவில்லை. அங்குள்ள மற்றொரு முக்கிய பழங்குடியினரான நாகா அமைப்புகளுடன் மத்திய அரசு நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க வலியுறுத்தி நேற்று அங்கு வாழும் நாகா சமூகத்தினர் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் பிரமாண்ட பேரணிகளை நடத்தினர்.

அந்தவகையில் தமேங்லாங், சேனாபதி, உக்ருல், சந்தல் போன்ற மாவட்ட தலைநகரங்களில் நடந்த இந்த பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

குகி இனத்தினர் ஆதரவு

நாகா பழங்குடியினர்களின் உயர்மட்ட அமைப்பான ஐக்கிய நாகா கவுன்சில் அழைப்பு விடுத்த இந்த பேரணிக்கு குகி பழங்குடியினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

தமேங்லாங் மாவட்டத்தில் 3 கி.மீ. தூரத்துக்கு நடந்த பேரணியில் ஏராளமான நாகா சமூகத்தினர் பங்கேற்றனர். இந்த பேரணி முடிவில் பிரதமர் மோடிக்கு வழங்குவதற்கான மனு ஒன்றை துணை கமிஷனரிடம் ஒப்படைத்தனர்.

உக்ருல் மாவட்டத்திலும் 3 கி.மீ. தூரத்துக்கு நடந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தையை வெற்றிரமாக முடிக்க வேண்டும் என்றும், நாகா மக்கள் வாழும் பகுதிகள் பிரிக்கப்படக் கூடாது என்றும் கோஷங்களை எழுப்பினர்.

மத்திய அரசுடன் ஒப்பந்தம்

மலைப்பிராந்தியங்களை அதிகமாக கொண்டுள்ள மணிப்பூரில் குகி, நாகா ஆகிய பழங்குடி மக்கள் இந்த மலைப்பகுதிகளில் அதிகமாக வசித்து வருகின்றனர்.

நாகா சமூகத்தை சேர்ந்த பயங்கரவாத குழுக்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு கட்டமைப்பு ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்கக்கோரி இந்த பேரணியை நாகா சமூகத்தினர் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சட்டசபை கூட்டம்

இந்த விவகாரத்தில் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாவதில் ஏற்படும் தாமதம் கவலை அளிப்பதுடன், இது சமாதான பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் சாத்தியம் உள்ளதாகவும் ஐக்கிய நாகா கவுன்சில் தெரிவித்து உள்ளது.

மணிப்பூரில் வருகிற 21-ந்தேதி சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதில் நாகா சமூக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கக்கூடாது என நாகா சமூக அமைப்பான நாகா கோகோ, 10 எம்.எல்.ஏ.க்களையும் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

இதைப்போல குகி சமூகத்தை சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டத்தொடரை புறக்கணிப்பார்கள் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்