குகி இனத்தினரின் தனி நிர்வாக கோரிக்கையை எதிர்த்து மணிப்பூரில் 5 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பேரணி

மணிப்பூரில் குகி இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு தனி நிர்வாகம் வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து பிரமாண்ட பேரணி நடந்தது.

Update: 2023-07-29 21:13 GMT

தனி நிர்வாக கோரிக்கை

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் கலவரம் வெடித்தது. 160-க்கு மேற்பட்ட உயிர்களை காவு கொண்டுள்ள இந்த வன்முறை சம்பவங்கள் அங்கு இன்னும் நீடிக்கின்றன. இந்த வன்முறையால் மனமுடைந்த குகி இனத்தினர் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு என தனி நிர்வாகம் வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த இனத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் கடந்த மே மாதம் இந்த கோரிக்கையை அறிவித்தனர். எனினும் என்ன மாதிரியான நிர்வாகம் மற்றும் எந்தெந்த பகுதிகளுக்கு அது தேவை என்பன போன்ற வரையறைகள் எதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் குகி இனத்தினரின் இந்த கோரிக்கை மற்ற பிரிவினர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து அவர்கள் ஏற்கனவே குரல் கொடுத்து இருந்தனர்.

பிரமாண்ட பேரணி

இதன் தொடர்ச்சியாக குகி இனத்தினரின் இந்த தனி நிர்வாக கோரிக்கைக்கு எதிராக நேற்று அவர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர். மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்த இந்த பேரணியில் 10 ஆயிரத்துக்கு அதிகமானோர் கலந்து கொண்டனர். இம்பால் மேற்கு மாவட்டத்தின் தங்மெய்பாண்டில் இருந்து கிழக்கு மாவட்டத்தின் ஹாப்டா வரை சென்ற இந்த பேரணியில் சமவெளி பகுதியை சேர்ந்த 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

குகி இனத்தினரின் கோரிக்கையை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தியிருந்த அவர்கள், தனி நிர்வாகத்துக்கு எதிராகவும், மியான்மரை சேர்ந்த சட்ட விரோத குடியேறிகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம்

பேரணி முடிவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இதில் பேசிய அமைப்பு நிர்வாகிகள், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் முன்னாள் குகி பயங்கரவாதிகளுக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்கள், கலவரம் தொடர்பாக விவாதிக்க அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதிக்குள் சிறப்பு சட்டசபை தொடர் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ராணுவ நடவடிக்கை

இந்த பேரணியில் கலந்து கொண்ட சரத் என்பவர் கூறும்போது, '3 மாதங்களாக படுகொலை, தீ வைப்பு என வன்முறை சம்பவங்கள் நடந்தபிறகு எப்படி எங்கள் நிலத்தை விட்டு கொடுக்க முடியும்?' என கேள்வி எழுப்பினார். இதைப்போல காந்தி என்பவர், 'பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார். இந்த பிரமாண்ட பேரணியால் இம்பால் மற்றும் சுற்று வட்டாரங்களில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மணிப்பூர் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு மாநிலத்துக்கு சென்றிருக்கும் நிலையில், இந்த பேரணி நடந்திருப்பது கவனிக்கத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்