செமஸ்டர் தேர்வில் செல்போன் மூலம் காப்பி அடித்ததால் கண்டிப்பு: கல்லூரியின் 8-வது மாடியில் இருந்து குதித்து மங்களூரு மாணவர் தற்கொலை
பெங்களூருவில் செமஸ்டர் தேர்வில் செல்போன் மூலம் காப்பி அடித்ததை கண்டித்ததால் கல்லூரியின் 8-வது மாடியில் இருந்து குதித்து மங்களூரு மாணவர் தற்கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பெங்களூரு:
தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர் ஆதித்யா பிரபு (வயது 19). இவர், பெங்களூருவில் தங்கி இருந்து கிரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வந்தார். பி.டெக் முதலாம் ஆண்டு ஆதித்யா படித்து வந்தார். தற்போது கல்லூரியில் 2-வது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற தேர்வை மாணவர் ஆதித்யா எழுதினார்.
கல்லூரியின் 8-வது மாடியில் வைத்து இந்த தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், தேர்வு எழுதும் போது ஆதித்யா காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. அதாவது செல்போன் வைத்து கொண்டு, அதனை பார்த்து அவர் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதுபற்றி உடனடியாக ஆதித்யாவின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் செல்போன் பயன்படுத்தியதால் ஆதித்யாவை பேராசிரியர்கள் கண்டித்தனர்.
இந்த நிலையில், கல்லூரியின் 8-வது மாடியில் இருந்து திடீரென்று ஆதித்யா கீழே குதித்தார். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆதித்யா பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கிரிநகர் போலீசார் விரைந்து வந்து ஆதித்யாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் துணை போலீஸ் கமிஷனர் கிருஷ்ணகாந்தும் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
மாணவர் ஆதித்யா செல்போன் பயன்படுத்தி, தேர்வில் காப்பி அடித்ததை கண்டித்ததால் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் துணை போலீஸ் கமிஷனர் கிருஷ்ணகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர் ஆதித்யா தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். செமஸ்டர் தேர்வில் காப்பி அடித்ததை பேராசிரியர்கள் கண்டித்ததால் மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.