கர்நாடகாவில் உட்கட்சி பூசல்: காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கார் மீது முட்டை வீச்சு

மாண்டியா மாவட்ட காங்கிரஸ் மாவட்ட செயலாளர் மீது சரமாரியாக முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய காங்கிரஸ் தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-06 18:03 GMT

மாண்டியா,

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்காததற்காக மாவட்டத் தலைவர் சி.டி.கங்காதரின் காரை காங்கிரஸ் கட்சியினர் முட்டையால் தாக்கினர். கார் மீது முட்டைகளை வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக இன்று கே.ஆர்.பேட்டை சட்டசபைத் தொகுதிக்கு, கட்சித் தொண்டர்களுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க கங்காதர் சென்றார். அப்போது அந்த தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரின் பெயரை குறிப்பிடும்படி கட்சியினர் அவரை வற்புறுத்தினர். தொடர்ந்து வேட்பாளரின் பெயரை வெளியிடுமாறு கோஷங்களை எழுப்பினர். ஆனால் கங்காதர் மவுனம் காத்து சிரித்தார்.

பின்னர் மாவட்டத் தலைவர் அவர்களைக் கடந்து சென்று தனது காருக்குள் சென்று அமர்ந்து கொண்டார். இதனால் பொறுமை இழந்த காங்கிரஸ் தொண்டர்கள் மாவட்ட செயலாளர் வந்த கார் மீது சரமாரியாக முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர். பின்பு அனைவரும் சமாதானம் பேசி கலைந்து சென்றனர்.

இதனிடையே கர்நாடக அமைச்சர் கே.சி.நாராயண கவுடா காங்கிரசில் இணையப்போவதாக மாண்டியா அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அவர் எதிர்கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை தீவிர கட்சி விசுவாசிக்கு மட்டுமே சீட்டு கிடைக்க வேண்டும் என்றும் வேறு யாருக்கும் சீட்டு கொடுக்க வேண்டாம் என்றும் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கர்நாடகாவில் மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்