பா.ஜனதாவால் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருக்க முடியுமா?; சித்தராமையா கேள்வி

மண்டல் கமிஷன் அறிக்கையை எதிா்த்த பா.ஜனதாவால் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருக்க முடியுமா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பி யுள்ளார்.

Update: 2023-04-09 20:58 GMT

பெங்களூரு:

மண்டல் கமிஷன் அறிக்கையை எதிா்த்த பா.ஜனதாவால் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருக்க முடியுமா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பி யுள்ளார்.

ஏமாற்ற முடியாது

கர்நாடக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்பு மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

அரசியல் சாசனம் மீது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு மரியாதை இல்லை. அவர்கள் சமத்துவத்திற்கு எதிரானவர்கள். சமத்துவ சமுதாயம், அனைவருக்கும் கல்வி, வளங்களை அனைவருக்கும் சரிசமமாக பங்கிட்டு வழங்குவது போன்றவற்றில் அந்த அமைப்பினருக்கு விருப்பம் இல்லை. சமத்துவ சமுதாயம் உருவானால் யாரையும் ஏமாற்ற முடியாது.

அனைவருக்கும் உரிமைகள்

கீழ்மட்ட மக்கள், மேல்மட்ட மக்கள் என்ற வகை இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். வளங்கள், அரசியல் அதிகாரம் நம்மிடமே இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதன் மூலம் மனுஸ்மிருதி சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். இவற்றுக்கு எதிராக தான் அம்பேத்கர் அரசியல் சாசனத்தை உருவாக்கினார். இது அனைவருக்கும் சமத்துவத்தை வழங்குகிறது. அனைவருக்கும் உரிமைகளை வழங்குகிறது.

அரசியல் சாசனத்தின் விருப்பங்களுக்கு எதிராக இருக்கும் கட்சி பா.ஜனதா. அரசியல் சாசனம் மீது மரியாதை இல்லாதவர்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால், அதன் விருப்பங்களை நிறைவேற்ற மாட்டார்கள். இதை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பேசினால் அதை பா.ஜனதா எதிர்க்கும். மண்டல் கமிஷன் அறிக்கையை பா.ஜனதா எதிர்த்தது.

இட ஒதுக்கீடு

மத்திய மந்திரியாக இருந்த அர்ஜூன் சிங் உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியபோது, அதை பா.ஜனதாவினர் எதிர்த்தனர். உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து பா.ஜனதாவினர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றனர். இத்தகைய பா.ஜனதாவினர் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருப்பது சாத்தியமா?.

இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று அக்கட்சியினர் கேள்வி கேட்கிறார்கள். சமூக அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனத்தில் இடம் இல்லை. ஆனாலும் உயர்சாதியில் பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கான சட்டத்தை அவசரகதியில் கொண்டு வந்தனர்.

சமத்துவ சமுதாயம்

எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் 48 மணி நேரத்தில் இந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தனர். இப்போது உயர்சாதியினருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கிறது. இந்த சூழ்நிலையில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியுமா?.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்