உடலுறவுக்கு மறுத்த மனைவி... தொழிலாளி செய்த கொடூர செயல்
நள்ளிரவில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதையடுத்து தொழிலாளி இந்த கொடூர செயலை செய்தார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகாவில் உள்ள பெடகேரா கிராமத்தில், உடலுறவு கொள்ள மறுத்ததாகக் கூறி, 42 வயது பெண் நாகம்மா, அவரது கணவரால் கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் ஷேக்கப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் குற்றத்தைச் செய்த பின்னர் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
ஷேக்கப்பா கூலித் தொழிலாளி ஆவார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த ஷேக்கப்பா மனைவி நாகம்மாவின் கழுத்தை நெரித்ததுடன், வீட்டில் கிடந்த கோடரியை எடுத்து கண்மூடித்தனமாக வெட்டினார். இதில், பலத்தகாயம் அடைந்த நாகம்மா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் நேற்று அதிகாலையில் சேடம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற ஷேக்கப்பா, தனது மனைவியை கொன்றதாக போலீசில் சரண் அடைந்தார்.
அப்போது நள்ளிரவில் 2 முறை தனது மனைவியை உடலுறவுக்கு அழைத்தேன். அவர் மறுத்து விட்டார். இதுதொடர்பாக 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டது. மனைவியை கொலை செய்து விடுவதாக மிரட்டினேன். அவர் என்னை கொலை செய்ய முடியாது என்று என்னை கேலி செய்தார். இதனால் அவரை கழுத்தை நெரித்தும், கோடரியால் வெட்டியும் கொலை செய்ததாக ஷேக்கப்பா கூறியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.