'தனது திருமணத்தை தடுத்து நிறுத்தும் சூனியக்காரி' என்று கூறி தாயை கொன்ற மகன்
'தனது திருமணத்தை தடுத்து நிறுத்தும் சூனியக்காரி' என்று கூறி தாயை, மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 'தனது திருமணத்தை தடுத்து நிறுத்தும் சூனியக்காரி' என்று கூறி தாயை, மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்துல் அகமது பர்ஹான் (32 வயது) ஒரு வர்த்தகப் பட்டதாரி. அப்துல் திருமணம் செய்து கொள்வதில் அவரது தாய் அஸ்மா பரூக் (வயது 67) ஆர்வம் காட்டாமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டைகள் ஏற்படுவது வழக்கம். அப்துலிடம் அவரது தாய் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக வேலை தேடுமாறு கூறியுள்ளார்.
இணையத்தில் பேய்கள் மற்றும் மந்திரவாதிகளின் வீடியோக்களை அதிகமாக பார்த்த அப்துல் தனது தாயையும் சூனியக்காரி என்று நம்பியுள்ளார். மேலும் அவரே தனது திருமணத்தை தடுத்து நிறுத்துவதாகவும் அப்துல் நம்பியுள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அப்துல் அவரது சகோதரரும் அண்ணியும் வீட்டில் இல்லாதபோது தனது தாயை கிரிக்கேட் மட்டை மற்றும் இரும்புக் குழாயால் அடித்து கொலை செய்துள்ளார். அவரது அண்ணனும் அண்ணியும் வீடு திரும்பிய போது மொட்டை மாடியில் இருந்து அவர்களது தாய் விழுந்து விட்டதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று கோ-இ-பிசா காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப் குர்ஜார் விசாரணை நடத்தினார். அப்போது அப்துலை விசாரித்ததில் உண்மை வெளியே வந்துள்ளது. அப்துல் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.