நடுரோட்டில் பெண்ணை ஓட ஓட விரட்டி அரிவாளால் தாக்கிய கணவர்

ஹாசன் அருகே சொத்து தகராறில் மனைவியை ஓட ஓட விரட்டி அரிவாளால் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-25 21:35 GMT

ஹாசன்:

ஹாசன் அருகே சொத்து தகராறில் மனைவியை ஓட ஓட விரட்டி அரிவாளால் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கணவன்-மனைவி தகராறு

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிபுா தாலுகா திருமலாப்புராவை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி சவிதா. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2 பேரும் பிரிந்து தனியாக வசித்து வந்தனர்.

இதற்கிடையில் சீனிவாஸ், மனைவி சவிதாவிடம் விவாகரத்து கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தநிலையில் குடும்ப சொத்து விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. குடும்பத்தினர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.

அரிவாளால் தாக்குதல்

இந்தநிலையில் நேற்று சவிதாவின் வீட்டிற்கு சென்ற சீனிவாஸ் அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது சீனிவாஸ் கையில் வைத்திருந்த இரும்பு ராடு மற்றும் அரிவாளால் மனைவியை தாக்கியுள்ளார். இதில் இருந்து தப்பி செல்வதற்காக சவிதா ஓடினார். ஆனால் சீனிவாஸ் விடவில்லை. சவிதாவை துரத்தி சென்று தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சவிதா நடுரோட்டில் சுருண்டு விழுந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர், சீனிவாசை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த ஆயுதத்தை பறித்தனர். பின்னர் சவிதாவை மீட்டு ஹாசனில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சீனிவாசை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து தகராறு

இதற்கிடையில் இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சவிதாவை நேரில் சந்தித்து விசாரித்தனர்.

இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த ஹரிராம் சங்கர் கூறியதாவது:-

சொத்து தகராறில் சீனிவாஸ் இரும்பு கம்பி, மற்றும் அரிவாளால் மனைவியை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிருக்கு ஆபத்து இல்லை. இந்த தாக்குதல் தொடர்பாக சீனிவாசை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்