சித்தராமையா பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை..!
சித்தராமையா பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்-மந்திரி தேர்வில் 4 நாட்களாக இழுபறி நீடித்தது. டி.கே.சிவக்குமார்- சித்தராமையா இடையே நீடித்த பனிப்போர் நேற்று முடிவுக்கு வந்தது. அதன்படி கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து சித்தராமையா பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) மதியம் 12.30 மணி அளவில் கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சித்தராமையாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதுபோல் டி.கே.சிவக்குமாரும் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். மேலும் 20-க்கும் மேற்பட்ட மந்திரிகளும் பதவி ஏற்க உள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவியேற்கும் விழாவில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மம்தா சார்பாக திரிணாமுல் காங்கிரஸ் மக்களை குழு துணை தலைவர் ககோலிகோஷ் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அத்துடன் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல், இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.