மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன்: சித்தராமையா கண்டனம்
பா.ஜனதா தனது தோல்விகளை மூடிமறைக்கும் நோக்கத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது என சித்தரமையா சாடியுள்ளார்.
பெங்களூரு,
நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்குத்தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அலுவலர்கள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கடந்த 2-ஆம் தேதி, டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்தில் உள்ள யங் இந்தியா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.இந்த வழக்குத்தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி யங் இந்தியா நிறுவனத்தின் முதன்மை அலுவலரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, இன்று நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அலுவலர்கள் முன்பு மல்லிகார்ஜுன கார்கே ஆஜரானார். விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-காங்கிரஸ் தலைவர்களை இலக்காக வைத்து பா.ஜனதா தனது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டுள்ளது. மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறைசம்மன் அனுப்பியுள்ளது. இதை கண்டிக்கிறேன். நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தாமல் இருக்க பா.ஜனதா சதி செய்துள்ளது. இதன் மூலம் பா.ஜனதா தனது தோல்விகளை மூடிமறைக்கும் நோக்கத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது.இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.