இந்தியா கூட்டணியின் தலைவராக கார்கே தேர்வு

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

Update: 2024-01-13 10:12 GMT

புதுடெல்லி:

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதற்காக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. 

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணி இதுவரை மூன்று முறை கூடி ஆலோசனை நடத்தி உள்ளது. இக்கூட்டங்களில் கூட்டணியின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது. எனினும், கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே, இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை தேர்வு செய்ய வேண்டும், தொகுதி பங்கீட்டையும் ஜனவரி இறுதிக்குள் பேசி முடிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் உள்பட 14 கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைவர் பொறுப்பை ஏற்க நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து கார்கே பெயரை தலைவர் பதவிக்கு முன்மொழிந்ததாக தெரிகிறது.

கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமாரை நியமிக்க முடிவு செய்துள்ளனர். கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்துடன் ஆதரவு தெரிவித்தால் இந்த பொறுப்பை ஏற்க உள்ளதாக நிதிஷ் குமார் கூறியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்