செங்கடலில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: பெட்ரோல், டீசல் வினியோகம் பாதிக்கப்படாது - ஹர்தீப்சிங் பூரி உறுதி
செங்கடலில் நிலைமை தீவிரம் அடையாது. எரிபொருள் வினியோகம் பாதிக்கப்படாது என்று ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களின் தாக்குதலுக்கு எண்ணெய் கப்பல்களும் தப்பவில்லை. இதனால், எண்ணெய் வினியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஜவகர் சிர்கார் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
செங்கடலில், அரசாங்கத்துக்கு சம்பந்தம் இல்லாத கிளர்ச்சியாளர்கள், எண்ணெய் வினியோக சங்கிலிக்கு இடையூறு விளைவித்து வருகிறார்கள். இது கவலை அளிக்கக்கூடிய விஷயம்தான்.
இருப்பினும், உலகம் முழுவதும் நல்லெண்ணம் பிறந்து, கவலையை அதிகரிக்கக்கூடிய காரணிகள் கட்டுப்படுத்தப்படும் என்று நம்புகிறோம். அதனால், நிலைமை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும். நிலைமை தீவிரம் அடையாது. எரிபொருள் வினியோகம் பாதிக்கப்படாது. இதுவரை சர்வதேச சமூகம் அனுசரித்து நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.