மராட்டியம்: ரூ.7,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

மராட்டியத்தில் ஷீரடி விமான நிலையத்தில் ரூ.645 கோடி மதிப்பிலான புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி இன்று நாட்டுகிறார்.

Update: 2024-10-09 04:11 GMT

புதுடெல்லி,

மராட்டியத்தில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், நாக்பூர் நகரில் அமைந்துள்ள பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தின் மேம்பாட்டு பணிக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி இன்று நாட்டுகிறார். இதன் திட்ட மதிப்பீடு ரு.7 ஆயிரம் கோடி ஆகும்.

இது, உற்பத்தி, விமான போக்குவரத்து, சுற்றுலா, தளவாடங்கள் மற்றும் சுகாதார நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அமையும். இதனால், நாக்பூர் நகரம் மற்றும் விதர்பா பகுதிகள் பலன் பெறும் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இதேபோன்று, ஷீரடி விமான நிலையத்தில் ரூ.645 கோடி மதிப்பிலான புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்திற்கான அடிக்கல்லையும் அவர் இன்று நாட்டுகிறார். ஷீரடிக்கு ஆன்மிக சுற்றுலா வருபவர்களுக்கு உலக தரத்திலான வசதிகளை இது வழங்கும்.

அனைவருக்கும் போதிய மற்றும் கிடைக்க கூடிய வகையிலான சுகாதார நலன்களை உறுதி செய்யும் உள்ளார்ந்த ஈடுபாட்டின் ஒரு பகுதியாக, மராட்டியத்தில் மும்பை, நாசிக் உள்ளிட்ட 10 அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி அறிவிக்க உள்ளதுடன், இந்த கல்லூரிகள் மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளையும் வழங்க வழிவகை செய்யும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்