'அதீத நம்பிக்கை கூடாது' - அரியானா தேர்தல் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
அரியானா தேர்தல் மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருந்தன. ஆனால் தொகுதி பங்கீட்டில் இருகட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. 9 இடங்கள் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்ததால் ஆம் ஆத்மி தனித்து களம் இறங்கியது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 89 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்டது.
அரியானாவில் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவு இல்லாமல் எந்த ஒரு ஆட்சியும் அமையாது என்று தேர்தல் பிரசாரத்தின்போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் பேசியிருந்தார். இந்த நிலையில் அரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அதேபோல் அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில், அதை பொய்யாக்கி பா.ஜனதா வெற்றி பெற்றது. இந்த நிலையில் டெல்லியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், "அரியானா தேர்தல் முடிவுகளை பாருங்கள். தேர்தலில் ஒருவர் அதீத நம்பிக்கையுடன் இருக்கக்கூடாது என்ற மிகப்பெரிய பாடத்தை இது கற்றுக்கொடுத்துள்ளது. எந்த தேர்தலையும் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வொரு தேர்தலும், ஒவ்வொரு தொகுதியும் கடினமானது தான்" என கூறினார்.