மற்ற மாநிலங்களில் இருப்பதை ஆய்வு செய்து 'லவ் ஜிகாத்' சட்டம் கொண்டு வரப்படும் - தேவேந்திர பட்னாவிஸ்

மற்ற மாநிலங்களில் இருப்பதை ஆய்வு செய்து மராட்டியத்தில் லவ் ஜிகாத் சட்டம் கொண்டு வரப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

Update: 2023-08-05 22:15 GMT

லவ் ஜிகாத்

இந்து பெண்களை திருமணம் செய்து இஸ்லாமிய மதத்திற்கு மாற்ற முயற்சி நடந்து வருவதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இவ்வாறு மதம் மாற்றப்படுவதை தடுக்க 'லவ் ஜிகாத்' தடை சட்டம் கொண்டு வர வலியுறுத்தி இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஏற்கனவே உத்தரபிரதேசம் போன்ற சில மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

இதுகுறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கூறியதாவது:-

பல வழக்குகள்

பெண்கள் திருமணம் செய்து மதம் மாற்றப்படுவதாக பல வழக்குகள் வந்துள்ளன. இதற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று எல்லா மூலைகளிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நான் சட்டசபையில் முன்பே தெரிவித்து இருக்கிறேன். அதன்படி பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தை ஆய்வு செய்து, மராட்டியத்திலும் கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பணி நியமனம்

மேலும் மோடி குடும்ப பெயர் குறித்த அவதூறு வழக்கில் இருந்து ராகுல் காந்தி விடுவிக்கப்பட்டது குறித்து பேசிய அவர், " சுப்ரீம் கோர்ட்டு தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினால் அது நல்லது, இல்லாவிட்டால் அது கெட்டது என்று சிலர் நினைக்கிறார்கள். ராகுல் காந்தி கூறிய கருத்து ஏற்புடையது அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள் இந்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பாராட்டி வருகின்றனர்.

மாநில அரசு விரைவில் 18 ஆயிரம் போலீசாரை பணி நியமனம் செய்யும். அதேநேரம் செப்டம்பர் மாதத்திற்குள் 650 முதல் 700 சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மேலும் ஆன்லைன் குற்றங்களை ஒழிக்க வங்கி, வங்கி அல்லாத பிற நிதி நிறுவனங்கள் மற்றும் காவல்துறையை ஒன்றிணைந்து நாட்டிலேயே மிகப்பெரிய சைபர் தளத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்