உச்சத்தில் தக்காளி விலை - ஒரே மாதத்தில் கோடீஸ்வரரான விவசாயி...!
ஒரே மாதத்த்தில் 1 கோடியே 50 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.
மும்பை,
நாடு முழுவதும் தக்காளி விலை உச்சத்தில் உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒருகிலோ தக்காளி இன்று 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தக்காளி ஒருகிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தக்காளி விவசாயி ஒரே மாதத்தில் 1 கோடியே 50 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் நாராயண்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் துகாராம் பஹொஜி கெய்கர். இவருக்கு 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 12 ஏக்கரில் துகாராம் தக்காளி பயிரிட்டுள்ளார். துகாராம் அவரது மகன் ஈஸ்வர் மருமகள் சோனாலி ஆகியோர் இணைந்து தங்கள் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளனர்.
போதிய அளவில் உரம் பயன்படுத்தி, பூச்சி, புழுக்கள் பாதிப்பில் இருந்து தக்காளிச்செடிகளை இவர்கள் வளர்த்து வந்த நிலையில் தற்போது தக்காளிச்செடிகள் நல்ல விளைச்சல் கொடுத்து வருகின்றன.
தற்போது தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் துகாராம் பஹொஜி கெய்கர் குடும்பத்திற்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் துகாராம் பஹொஜி கெய்கர் 13 ஆயிரம் தக்காளிப்பெட்டிகள் (கிரேட்ஸ்) விற்பனை செய்துள்ளார். ஒரு தக்காளி பெட்டி சராசரியாக 1,000 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 400 ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். 13 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனை செய்ததன் மூலம் ஒட்டுமொத்தமாக துகாராம் ஒரு மாதத்தில் 1 கோடியே 50 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.
குறிப்பாக, நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு பெட்டி (கிரேட் - 20 கிலோ) தக்காளி 2 ஆயிரத்து 100 ரூபாய் விகிதத்தில் 900 தக்காளிப்பெட்டிகளை விற்பனை செய்து 18 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.
துகாராமை போன்று கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு விவசாய குடும்பம் 2 ஆயிரம் தக்காளி பெட்டிகளை சந்தையில் விற்பனை செய்து 38 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.