பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட போலீஸ்காரர் தந்தையானார்
இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு சத்ரபதி சம்பாஜிநகரை சேர்ந்த சீமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.;
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட போலீஸ்காரருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் லலிதா சால்வே. இவர் கடந்த 2010-ம் ஆண்டு மராட்டிய காவல்துறையில் பெண் போலீசாக பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் இவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு ஆண்களுக்குரிய தன்மைகள் அதிகமானதாக உணர்ந்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர்கள் நடத்திய பரிசோதணையில் லலிதாவிற்கு ஆண்களைப் போல 'எக்ஸ்' மற்றும் 'ஒய்' குரோமோசோன்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஆணாக மாற பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து லலிதா சால்வே கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய மாநில போலீஸ் தலைமையகத்தில் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் போலீஸ் தலைமையகம் அவருக்கு அனுமதி கொடுக்கவில்லை.
எனவே அவர் இதுகுறித்து முதல் - மந்திரியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில நிர்வாக தீர்ப்பாயத்திடமும் முறையிட்டு இருந்தார். இவருக்கு கடந்த 2018ம் ஆண்டு பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அனுமதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை இவருக்கு 3 முறை பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவர் அறுவை சிகிச்சைக்கு பிறகு லலித்குமார் சால்வே என பெயரை மாற்றிக்கொண்டு ஆண் போலீசாக தொடர்ந்து மராட்டிய காவல்துறையில் பணியாற்றினார். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு சத்ரபதி சம்பாஜிநகரை சேர்ந்த சீமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 15ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சால்வே செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பெண்ணாக இருந்து ஆணாக மாறிய எனது பயணம் போராட்டங்கள் நிறைந்தது. இந்த நேரத்தில், எனக்கு ஆதரவாக பலர் இருப்பது எனக்கு பாக்கியம். என் மனைவி சீமா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டாள். இப்போது நான் அப்பா ஆகியதில் மகிழ்ச்சி.. என் குடும்பம் குதூகலத்தில் இருக்கிறது'. என்று தெரிவித்தார்.