மராட்டியம்: முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மந்திரி சபை இன்று விரிவாக்கம்?

ஏக்நாத் ஷிண்டே அரசு பதவி ஏற்று 40 நாட்களுக்கு பிறகு மந்திரி சபை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.

Update: 2022-08-09 03:26 GMT

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஜூன் மாத இறுதியில் அரசியல் சூறாவளி ஏற்பட்டது. சிவசேனாவில் பிளவு ஏற்பட்டதால் அக்கட்சி தலைமையில் நடைபெற்று வந்த கூட்டணி அரசு கவிழ்ந்தது. சிவசேனா அதிருப்தியாளர்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றினர். ஜூன் 30-ந் தேதி முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டேயும், துணை முதல்-மந்திரியாக பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிசும் பதவி ஏற்றனர்.

இருப்பினும் மந்திரி சபை விரிவாக்கம் செய்வதில் தொடர் இழுபறி ஏற்பட்டு வந்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. இதற்கு மத்தியில் முதல்-மந்திரி பதவி ஏற்ற பிறகு ஏக்நாத் ஷிண்டே 7 தடவை டெல்லி சென்று திரும்பினார். அந்த தருணத்தின்போது மந்திரி சபை விரிவாக்கம் தொடர்பாக அவர் பா.ஜனதா மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் புதிய அரசு பதவி ஏற்று 40 நாட்களுக்கு பிறகு மராட்டிய மந்திரி சபை இன்று (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக ஷிண்டே தரப்பும், பா.ஜனதாவும் தெரிவித்துள்ளன. ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் நடக்கிறது.

இன்றைய விரிவாக்கத்தின்போது 12 பேர் மட்டும் மந்திரி பதவி ஏற்பார்கள் என்றும், மற்றவர்கள் 2-வது கட்ட மந்திரி சபை விரிவாக்கத்தின் போது பதவி ஏற்பார்கள் என்றும் ஏக்நாத் ஷிண்டேக்கு நெருக்கமான எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்தார்.

நாள் நடைபெறும் மந்திரி சபை விரிவாக்கத்தில் ஷிண்டே தரப்பில் இருந்து பாரத் கோகவாலே, சம்புராஜ் தேசாய் ஆகியோரும், பா.ஜனதா தரப்பில் இருந்து கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், சுதீர் முங்கண்டிவார், கிரிஷ் மகாஜன், ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சுரேஷ் காகடே, அதுல் சாவே ஆகியோரின் பெயர் அடிபடுகிறது. துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு முக்கிய இலாகாவான உள்துறை ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்