மராட்டியத்தில் தண்டவாளத்தை சரி செய்தபோது டவர் வேகான் மோதி 4 ஊழியர்கள் உயிரிழப்பு

மராட்டியத்தில் தண்டவாளத்தை சரி செய்தபோது டவர் வேகான் மோதியதில் 4 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

Update: 2023-02-13 14:22 GMT

கோப்புப்படம்

நாசிக்,

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் லாசல்கான் அருகே அதிகாலையில் ரெயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெயில்வே பராமரிப்பு பணிக்காக பயன்படுத்தப்படும் டவர் வேகன் வாகனம் தவறான பக்கத்திலிருந்து வந்து அவர்கள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த நான்கு ஊழியர்கள் லாசல்கான் கிராமப்புற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். டவர் வேகன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மத்திய ரெயில்வேயின் லாசல்கான் மற்றும் உகான் ரெயில் நிலையங்களுக்கு இடையே அதிகாலை 5.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

விபத்து நடந்து 3 மணி நேரமாகியும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனக் கூறி கோபமடைந்த ரெயில்வே ஊழியர்கள் லாசல்கான் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். மேலும் மன்மாட்-மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் கோதாவரி எக்ஸ்பிரசை சுமார் 10 நிமிடங்கள் நிறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்