மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்முதலீட்டுப் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் குறித்து தி.மு.க. எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சுற்றுச்சுவர் கட்டுமானம் உள்ளிட்ட முன்முதலீட்டுப் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முக்கிய பணிகளை மேற்கொள்ள தகுதிவாய்ந்த ஏலதாரர்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ஜப்பானைச் சேர்ந்த ஜிகா அமைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள கடன் ஒப்பந்தத்தின்படி வரும் 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கூடுதால தொற்றுநோய் சிகிச்சைப்பிரிவு, கட்டுமான பரப்பளவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் திட்ட மதிப்பிட்டிற்கான செலவு ரூ.1,264 கோடியில் இருந்து ரூ.1,977 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.