மத்திய பிரதேசம்: 12 வயது மகளை ரூ.40 ஆயிரத்திற்கு 27 வயது நபருக்கு விற்ற பெற்றோர்
மத்திய பிரதேசத்தில் 12 வயது மகளை ரூ.40 ஆயிரம் பணத்திற்கு 27 வயது நபருக்கு பெற்றோர் விற்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தின் போபால் நகர் அருகே குணகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெற்றோர் அவர்களுடைய 12 வயது மகளை 27 வயது நபர் ஒருவருக்கு பணம் பெற்று கொண்டு விற்று விட முடிவு செய்து உள்ளனர்.
இதில், இருவருக்கும் மஞ்சள் பூசும் நிகழ்ச்சியின்போது, மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி துறையை சேர்ந்த அதிகாரிகளின் தகவலை பெற்ற போபால் கிராமப்புற போலீஸ் சூப்பிரெண்டு கிரண்லதா கெர்கேட்டா தலைமையிலான போலீசார் உடனடியாக சென்று விசாரணை நடத்தினர்.
இதில், அந்த சிறுமிக்கு 12 வயது என்பதும் மற்றும் அந்த சிறுமியை திருமணம் செய்ய இருந்த நபருக்கு 27 வயது என்பதும் தெரிய வந்தது.
அந்த சிறுமி போலீசாரிடம் கூறும்போது, ரூ.40 ஆயிரம் பணத்திற்கு அவரது பெற்றோர் அந்நபரிடம் விலைபேசி விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அதனை பெற்றோர் நிராகரித்து விட்டனர் என கூறியுள்ளார்.
இதன்படி பெற்றோருக்கு முன்பணம் ரூ.20 ஆயிரம் கொடுக்கப்பட்டு உள்ளது. திருமணத்திற்கு பின்பு ரூ.20 ஆயிரம் மீத தொகையை கொடுப்பது என முடிவானது.
இதனால், குழந்தை திருமணத்திற்கு தூண்டுதல் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் பெற்றோர், மணமகன் மற்றும் அவரது பெற்றோர் என 5 பேரை கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.