கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீட்டின் மீது வெடிகுண்டுகளை வீசிய நபர்
மத்தியப்பிரதேசத்தில் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீட்டின் மீது ஒருவர் வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
போபால்,
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஒரு வீட்டில் வசித்த நபர் ஒருவர், தனக்கு டெபாசிட் பணத்தை கொடுக்க மறுத்ததாக கூறி வீட்டு உரிமையாளரின் வீட்டில் வெடிகுண்டுகளை வீசியும் , துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
ஜபல்பூரின் காமாபூர் பகுதியில் உள்ள பாரத் கிரிஷி சமாஜ் பள்ளிக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்படும் நபர் ஆனந்த் தாக்கூர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பதிவான சிசிடிவி காட்சிகளில், ஆனந்த் தாக்கூர் இரு கைகளிலும் வெடிகுண்டுகளை ஏந்தியபடி நடந்து செல்வதும், குடியிருப்பை அடைந்ததும் ஒன்றன் பின் ஒன்றாக வெடிகுண்டுகளை வீசுவதும் பதிவாகியுள்ளது. ஒரு வெடிகுண்டு வெடிக்கத் தவறிய நிலையில், மற்றொன்று வெடித்து புகை மேகங்கள் சூழும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. முன்னதாக, அருகில் உள்ள கோவிலில் சாமி கும்பிட்ட ஆனந்த் தாக்கூர், வீட்டு உரிமையாளர் மான் சிங் தாக்கூரின் இல்லத்தின் மீது வெடிகுண்டுகளை வீசும் காட்சிகளும் அந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
குடியிருப்பாளர்களை மட்டுமல்ல, தொழிலதிபர்களையும் மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஆனந்த் தாக்கூர் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆனந்த் தாக்கூரை போலீசார் தேடி வருகின்றனர்.